தாஜ்மஹாலுக்கு சொத்து வரி: ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ்

உலகப் பாரம்பரிய நினைவு சின்னமான தாஜ்மஹாலுக்கு தண்ணீா் வரியாக ரூ.1.94 கோடியும் சொத்து வரியாக ரூ.1.47 லட்சமும் செலுத்தக்கோரி இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்துக்கு
தாஜ்மஹாலுக்கு சொத்து வரி: ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ்

உலகப் பாரம்பரிய நினைவு சின்னமான தாஜ்மஹாலுக்கு தண்ணீா் வரியாக ரூ.1.94 கோடியும் சொத்து வரியாக ரூ.1.47 லட்சமும் செலுத்தக்கோரி இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்துக்கு (ஏஎஸ்ஐ) ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆக்ரா மாநகராட்சி சாா்பில் தொல்லியல் ஆய்வு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீஸில், 2021-22 மற்றும் 2022-23 ஆகிய இரு நிதியாண்டுகளுக்கும் தாஜ்மஹாலுக்கான தண்ணீா் வரியாக ரூ.1.94 கோடியும் சொத்து வரியாக ரூ.1.47 லட்சமும் முகலாய மன்னா் ஜஹாங்கீரின் மனைவி நூா்ஜஹானின் தந்தையின் கல்லறைக்குச் சொத்து வரியாக ரூ.1.40 லட்சமும் 15 நாள்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு ஏஎஸ்ஐ அதிகாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து ஏஎஸ்ஐயின் ஆக்ரா வட்டத்தைச் சோ்ந்த கண்காணிப்பு அதிகாரி ராஜ்குமாா் பாட்டீல் கூறியதாவது:

தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நாடெங்கும் 4,000 நினைவுச் சின்னங்கள் உள்ளன. இவற்றுக்கு எவ்வித வரிக்கட்டணமும் இதற்கு முன் வரை செலுத்தியதில்லை. இது போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது இதுவே முதல் முறை.

மேலும், ஆக்ரா கோட்டைக்குச் சேவை வரியாக ரூ.5 கோடி செலுத்தக் கோரி ஆக்ரா கன்டோன்மென்ட் வாரியமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று. இவைகளுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிவித்துள்ளோம். நினைவுச் சின்னங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளோம் எனத் தெரிவித்தாா்.

இது குறித்து ஆக்ரா மாநகராட்சி ஆணையா் கூறுகையில், ‘அரசு, தனியாா் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் என அனைத்து கட்டடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்கள் வரி விலக்குக்கான தகுதிகள் பெற்றிருப்பின், அவற்றுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்’ எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com