வெளிச்சந்தைக்கு 15-20 லட்சம் டன் கோதுமை வழங்க முடிவு: மத்திய அரசு

சில்லறை விலை உயர்வைக் கட்டுப்படுத்த திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், மாவு ஆலைகள் போன்ற மொத்த நுகர்வோருக்கு எஃப்சிஐ கையிருப்பிலிருந்து 15-20 லட்சம் டன் கோதுமையை வழங்க அரசு பரிசீலிப்பு.
கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுதில்லி: சில்லறை விலை உயர்வைக் கட்டுப்படுத்த திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், மாவு ஆலைகள் போன்ற மொத்த நுகர்வோருக்கு இந்திய உணவுக் கழக கையிருப்பிலிருந்து அடுத்த ஆண்டு 15-20 லட்சம் டன் கோதுமையை வழங்க அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நுகர்வோர் விவகார அமைச்சகம் தரவுகளின்படி, டிசம்பர் 27 அன்று ஒரு கிலோ கோதுமையின் சராசரி சில்லறை விலையானது ரூ.32.25 ஆக இருந்த நிலையில், அதன் முந்தைய ஆண்டின் அதே காலக்கட்டத்தில் ஒரு கிலோவுக்கு ரூ.28.53ஆக இருந்தது. அதே வேளையில் கடந்த ஆண்டு கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூ.31.74 ஆக இருந்ததை விட தற்போது ஒரு கிலோவுக்கு ரூ.37.25 ஆக உள்ளது.

திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கொள்கையின் கீழ், அரசின் கீழ் வரும் இந்திய உணவுக் கழகம், உணவு தானியங்களை, குறிப்பாக கோதுமை மற்றும் அரிசியை வெளிச்சந்தையில் குறிப்பிட்ட விலையில் மொத்த நுகர்வோர் மற்றும் தனியார் வர்த்தகர்களுக்கு அவ்வப்போது விற்க அனுமதித்துள்ளது.

அதே வேளையில் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, மாவு ஆலைகள் கூட இந்திய உணவு கழக குடோன்களில் இருந்து கோதுமை இருப்புகளை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி நிலவரப்படி சுமார் 180 லட்சம் டன் கோதுமையும், 111 லட்சம் டன் அரிசியும் மத்திய தொகுப்பில் உள்ளது. அதே வேளையில் புதிய பயிர் கொள்முதல் ஏப்ரல் 2023 முதல் தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com