வார இறுதியில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு

வார இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கைத் தொடர்வது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
வார இறுதியில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு

பெங்களூரு: வார இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கைத் தொடர்வது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
வார இறுதியில் அமல்படுத்தப்படும் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தியுள்ள கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாக ஜன. 21-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
கரோனா மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி இயல்பான தினசரி வாழ்க்கையை தொடர்வதே நல்லது என்ற கருத்து நிலவுகிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். ஜன. 21-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர்கள் தெளிவான பார்வையை வழங்குவார்கள். அவர்களின் கருத்துகளைக் கேட்டபின் சரியான முடிவை அரசு  அறிவிக்கும். 
மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளேன். அனைவருக்கும் இரு தவணை தடுப்பூசி செலுத்துவது தவிர, 15 முதல்18 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அதேபோல, முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 94 சதவீதம் பேர் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, மருந்து மாத்திரைகளைக் கொடுத்து, மருத்துவ வழிகாட்டுதல்களை வழங்குமாறு  கூறியுள்ளேன்.
கிராமப்புறங்களில் வீடு வீடாகச் சென்று கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவர்களை ஊக்கப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகமிருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவு என்பதால், வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவைப் பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வெவ்வேறு மாநிலங்களில் காணப்படும் கரோனா பாதிப்பின் போக்கை ஆராய்ந்துள்ள மருத்துவ நிபுணர்கள், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு ஜனவரி இறுதி வாரத்திலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ உச்சத்தை எட்டும்  என்று கணித்துள்ளனர். கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பாரம்பட்சம் காட்ட மாட்டோம்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க விரும்பவில்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நான், கடந்த 11, 12 நாட்களாக வீட்டுத் தனிமையில் இருந்தேன். வீட்டுத் தனிமை முடிவடைந்து சோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியான பிறகே வெளியே வந்துள்ளேன். புதன்கிழமை முதல் வழக்கமானப் பணிகளில் தொடருவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com