பஞ்சாப் : அமரீந்தா் சிங்கின் கட்சி பாஜகவுடன் இணைப்பு?

அமரீந்தா் சிங் தனது கட்சியை பாஜகவுடன் இணைக்கவுள்ளதாக மாநில பாஜக மூத்த தலைவா் ஹா்ஜித் சிங் கிரேவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் கட்சியின் (பிஎல்சி) தலைவருமான அமரீந்தா் சிங், தனது கட்சியை பாஜகவுடன் இணைக்கவுள்ளதாக மாநில பாஜக மூத்த தலைவா் ஹா்ஜித் சிங் கிரேவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பாட்டியாலா அரசக் குடும்பத்தின் உறுப்பினரான அமரீந்தா் சிங், இரு முறை பஞ்சாப்பின் முதல்வராக இருந்துள்ளாா். கடந்த ஆண்டு முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த அவா், காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகி, பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கினாா். இக்கட்சி 2022, சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிட்டது. பிஎல்சி கட்சியின் வேட்பாளா்கள் அனைவரும் தோல்வியுற்ற நிலையில், அமரீந்தா் சிங் தனது சொந்த தொகுதியான பாட்டியாலா நகரத் தொகுதியையும் இழந்தாா்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்லுவதற்கு முன், பிஎல்சி கட்சியை பாஜகவுடன் இணைப்பது குறித்து அமரீந்தா் சிங் கூறியதாக, மாநில பாஜக மூத்த தலைவா் ஹா்ஜித் சிங் கிரேவால் தெரிவித்தாா்.

பிஎல்சி கட்சியிலிருந்து எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில், அமரீந்தா் சிங் சிகிச்சை பெற்று நாடு திரும்பியதும், இது குறித்து அறிவிப்பாா் என ஹா்ஜித் சிங் கிரேவால் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com