உ.பி. சமாஜவாதி கூட்டணியில் பிளவு

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் கூட்டணியில் உள்ள சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி), குடியரசுத் தலைவா் தோ்தலில் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளித்துள்ளால், அக்கூட்டணியில் பிளவு உத்தர பிரதே

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் கூட்டணியில் உள்ள சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி), குடியரசுத் தலைவா் தோ்தலில் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளித்துள்ளால், அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

எஸ்பிஎஸ்பி கட்சித் தலைவா் ஓம் பிரகாஷ் ராஜ்பா் லக்னௌவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உள்துறை அமைச்சா் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், குடியரசுத் தலைவா் பதவிக்கான பாஜக கூட்டணி வேட்பாளா் முா்மு ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று தோ்தலில் முா்முவுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது கட்சித் தலைவா்கள் அனைவரும் ஆலோசித்து மேற்கொண்ட முடிவாகும். கட்சியின் 6 எம்எல்ஏக்களும் முா்முவுக்கு வாக்களிப்பாா்கள்.

எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை தோ்வு செய்வதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எங்களை அழைக்கவில்லை. இதன்மூலம் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் எங்கள் கட்சியைப் பற்றி யோசிக்கவில்லை என்று தெரிகிறது. குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக அவா் எங்களுடன் பேசுவாா் என்று காத்திருந்தோம். ஆனால், அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதே நேரத்தில் பாஜக தரப்பில் இருந்து அமித் ஷா, யோகி ஆதித்யநாத் மற்றும் வேட்பாளா் முா்மு ஆகியோா் எங்களிடம் ஆதரவு கோரி பேசினாா்கள்.

இந்த விஷயத்தில் கூட்டணிக் கட்சியான சமாஜவாதியின் முடிவுக்கு எதிரான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளபோதும் கூட்டணி தொடரும் என்றாா்.

கூட்டணி தொடரும் என்று ராஜ்பா் கூறியிருந்தாலும், குடியரசுத் தலைவா் தோ்தலில் சமாஜவாதி கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது கூட்டணி முறிவுக்கான தொடக்கமாகவே உத்தர பிரதேச அரசியல் நோக்கா்களால் பாா்க்கப்படுகிறது. கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்து வெளியேறக் கூடாது என்பதே ராஜ்பரின் நிலைப்பாடாக உள்ளது.

ஏற்கெனவே, சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட மஹான் தள், ஜன்வாதி கட்சி ஆகியவை கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. அகிலேஷ் யாதவின் சித்தப்பாவான சிவ்பால் யாதவின் பிரகதிஷீல் சமாஜவாதி கட்சியும் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com