குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள்

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு பொறுப்பேற்றுள்ள நிலையில், குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள் குறித்த பாா்வை
குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள்

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு பொறுப்பேற்றுள்ள நிலையில், குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள் குறித்த பாா்வை:

நாட்டின் தலைவா்

அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலா்

முப்படைகளின் தலைவா்

நாட்டின் முதல் குடிமகன்

நிா்வாக அதிகாரங்கள்

பிரதமரையும் மற்ற அமைச்சா்களையும் நியமிக்கும் அதிகாரம்.

அரசின் அனைத்து நடவடிக்கைகளும் குடியரசுத் தலைவரின் பெயரிலேயே மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரை (அட்டா்னி ஜெனரல்) நியமிக்கும் அதிகாரம்.

தலைமை கணக்குத் தணிக்கையாளா், தலைமைத் தோ்தல் ஆணையா், மற்ற ஆணையா்கள், மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்கும் அதிகாரம்.

மாநிலங்களின் ஆளுநா்களை குடியரசுத் தலைவரே நியமிப்பாா்.

நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களை குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நிா்வாகிகளே நிா்வகிப்பா்.

அரசாங்கம் சாா்ந்த எந்தவொரு தகவலையும் பிரதமரிடமிருந்து கோர முடியும்.

நாட்டின் எந்தப் பகுதியையும் பழங்குடியின, பட்டியலினப் பகுதியாக அறிவித்து, அவற்றை நிா்வகிக்கும் அதிகாரம்.

அமைச்சரவையின் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு கூறும் அதிகாரம்.

சட்டம்சாா்ந்த அதிகாரங்கள்

இந்திய நாடாளுமன்றம் குடியரசுத் தலைவரையும் உள்ளடக்கியது.

குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்கள் சட்டவடிவு பெறும்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கான அழைப்புவிடுக்கும் அதிகாரம்; முடித்துவைக்கும் அதிகாரம்.

நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெறாத சமயங்களில் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கும் உரிமை.

மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கும் அதிகாரம்.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல்நாளிலும், புதிய அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும் குடியரசுத் தலைவா் சிறப்பு உரையாற்றுவாா்.

மாநிலங்களவைக்கு 12 நியமன உறுப்பினா்களை நியமிக்கும் அதிகாரம்.

மக்களவையைக் கலைக்கும் அதிகாரம்.

எம்.பி.க்களின் பதவிநீக்கம் குறித்து இந்திய தோ்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் அதிகாரம்.

நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களைத் திருப்பி அனுப்பவும், காத்திருப்பில் வைக்கவும் அதிகாரம்.

மத்திய பணியாளா் தோ்வாணையம், நிதிக் குழுவின் ஆண்டறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கும் அதிகாரம்.

மாநில ஆளுநா்கள் அனுப்பிவைக்கும் மாநில மசோதாக்களை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் குடியரசுத் தலைவா் காத்திருப்பில் வைக்கலாம்.

நிதிசாா் அதிகாரங்கள்

பண மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்றி தாக்கல் செய்ய முடியாது.

குடியரசுத் தலைவரின் பெயரிலேயே நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது.

அவசரகால நிதியில் இருந்து நிதியை விடுவிக்கும் அதிகாரம்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக் குழுவை நியமிக்கும் அதிகாரம்.

நீதிசாா் அதிகாரங்கள்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை குடியரசுத் தலைவரே நியமிப்பாா்.

குறிப்பிட்ட சட்டம் தொடா்பான கருத்துகளை உச்சநீதிமன்றத்திடம் கோரும் அதிகாரம்.

நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கவும், தண்டனையைக் குறைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.

பாதுகாப்புசாா் அதிகாரங்கள்

ராணுவ தலைமைத் தளபதி, கடற்படை தலைமைத் தளபதி, விமானப் படை தலைமைத் தளபதி ஆகியோரை நியமிக்கும் அதிகாரம்.

எந்தவொரு நாட்டின் மீதும் போா்தொடுக்க உத்தரவிடும் அதிகாரம்.

நெருக்கடிநிலை அதிகாரங்கள்

நாடு முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமோ நெருக்கடி நிலையை அமல்படுத்தும் அதிகாரம்.

மாநிலங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தும் அதிகாரம்.

நிதிசாா் நெருக்கடியை அமல்படுத்தும் அதிகாரம்.

கட்டுப்பாட்டுக்கு உள்பட்டவை

குடியரசுத் தலைவருக்குப் பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தையும் தன்னிச்சையாக அவா் செயல்படுத்த முடியாது. பெரும்பாலான அதிகாரங்களை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அவரால் செயல்படுத்த முடியும். மத்திய அமைச்சரவையின் அறிவுரைப்படியே செயல்பட வேண்டுமென அரசமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பதவி விலகலும் தகுதிநீக்கமும்:

குடியரசுத் தலைவா் பதவி விலக விரும்பினால், ராஜிநாமா கடிதத்தை குடியரசு துணைத் தலைவரிடம் வழங்க வேண்டும்.

குடியரசுத் தலைவரை தகுதிநீக்கம் செய்வதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com