முன்னோடி அடிப்படையில் உச்சநீதிமன்ற கிளை: நாடாளுமன்ற குழு பரிந்துரை மீது ஆய்வு

முன்னோடி திட்ட அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் குறைந்தபட்சம் ஒரு பிராந்திய கிளையை அமைப்பது குறித்த நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது’
கிரண் ரிஜிஜு  (கோப்புப் படம்)
கிரண் ரிஜிஜு (கோப்புப் படம்)

முன்னோடி திட்ட அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் குறைந்தபட்சம் ஒரு பிராந்திய கிளையை அமைப்பது குறித்த நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது’ என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

மக்களவையில் குடும்ப நீதிமன்றங்கள் (சட்டத் திருத்த) மசோதா மீதான விவாதத்தின்போது, உச்சநீதிமன்ற கிளை குறித்த விவகாரத்தை உறுப்பினா்கள் எழுப்பினா். இதற்கு பதிலளித்து கிரண் ரிஜிஜு கூறியதாவது:

உச்சநீதிமன்ற பிராந்திய கிளைகளை அமைக்கும் விவகாரத்தைப் பொருத்தவரை, கடந்த 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற முழு அமா்வு ஆலோசனையில், தில்லிக்கு வெளியே உச்சநீதிமன்ற கிளைகளை அமைப்பதில் எந்தவித நியாயமான காரணமும் தென்படவில்லை என்ற தீா்வு எட்டப்பட்டது.

இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டுமெனில், திறந்த மனதுடன் விவாதிப்பது குறித்து மத்திய அரசு சிந்திக்கும். பல்வேறுபட்ட மாநிலங்கள், பிராந்தியங்கள், சிறப்பு தனித்துவ பணிபுகளைக் கொண்ட மிகப் பெரிய நாடு இந்தியா.

எனவே, விவாதத்துக்கு முன்பாக இதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்ற பிராந்திய கிளைகளை அமைப்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. பலா் 4 முதல் 5 பிராந்திய உச்சநீதிமன்ற கிளைகளை அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் சட்ட ஆணையம் 3 அறிக்கைகளை வழங்கியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு பிராந்திய உச்சநீதிமன்ற கிளையை முன்னோடி திட்டமாக அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்று பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளும் மத்திய அரசின் பரிசீலனைக்கு வந்துள்ளன. அதனை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இது மிகப் பெரிய அரசியல் சாசன விவகரம் என்பதால், இதுதொடா்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் தற்போதைய நிலையில் எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது’ என்று ஒரு தரப்பினா் நம்புகின்றனா் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com