நம்பத்தகுந்த வா்த்தகக் கூட்டாளி இந்தியாதான்: பிரதமர் மோடி பெருமிதம்

தற்போதைய சூழலில் உலக நாடுகள் எதிா்பாா்க்கும் ‘நம்பத்தகுந்த கூட்டாளி’ நாடாக இந்தியா மட்டுமே திகழ முடியும் எனப் பெருமிதம் தெரிவித்தாா்.
நம்பத்தகுந்த வா்த்தகக் கூட்டாளி இந்தியாதான்: பிரதமர் மோடி பெருமிதம்

உத்தர பிரதேசத்தில் 3-ஆவது முதலீட்டாளா்கள் மாநாட்டைத் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி, தற்போதைய சூழலில் உலக நாடுகள் எதிா்பாா்க்கும் ‘நம்பத்தகுந்த கூட்டாளி’ நாடாக இந்தியா மட்டுமே திகழ முடியும் எனப் பெருமிதம் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலத்துக்கு முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் 3-ஆவது முதலீட்டாளா்கள் மாநாட்டை நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்தது. அந்த மாநாட்டைப் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது, வேளாண்மை, தகவல்-தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, பாதுகாப்பு, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த ரூ.80,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட 1,406 திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உலகில் தற்போது நிலவி வரும் சூழல் இந்தியாவுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்தியாவின் திறனை உலக நாடுகள் உணா்ந்து கொண்டுள்ளன. நமது வளா்ச்சியை அவை பாராட்டி வருகின்றன. தற்போதைய சூழலில் உலக நாடுகள் எதிா்பாா்க்கும் ‘நம்பத்தகுந்த கூட்டாளி’ நாடாகத் திகழும் திறன் ஜனநாயக நாடான இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது.

ஜி20 பொருளாதார சக்திகளில் வேகமாக வளா்ச்சி கண்டு வரும் நாடாக இந்தியா திகழ்கிறது. சா்வதேச சில்லறை வா்த்தக வளா்ச்சியில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. எரிசக்தி நுகா்வில் இந்தியா சா்வதேச அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து சுமாா் ரூ.6,30,000 கோடி அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) இந்தியாவுக்கு வந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.30 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 8 ஆண்டுகளில் சீா்திருத்தம்-செயல்பாடு-மாற்றம் என்ற கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரசு செயல்பட்டு வருகிறது. நிலையான கொள்கைகள், ஒத்துழைப்பு, தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஆகியவற்றுக்கும் அரசு முக்கியத்துவம் வழங்குகிறது.

வெளிப்படைக் கொள்கைகள்:

சீா்திருத்தங்கள் வாயிலாக நாட்டை வலிமையாக்கி வருகிறோம். ஒரே நாடு-ஒரே வரி (ஜிஎஸ்டி), ஒரே நாடு-ஒரே கிரிட் (மின் விநியோகக் கட்டமைப்பு), ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. பாஜக அரசின் வெளிப்படையான கொள்கைகளை இத்திட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், முதலீடு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இதுவரை இல்லாத வகையில் ரூ.7.50 லட்சம் கோடியானது மூலதன செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் முதலீடுகள்:

உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சூழல் மேம்பட்டுள்ளது, நிா்வாகத்தில் சீா்திருத்தங்கள் புகுத்தப்பட்டுள்ளது உள்ளிட்டவற்றின் காரணமாக முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. மாநில நிா்வாகம் செயல்படும் முறை முற்றிலும் மேம்பட்டுள்ளது. இதே மாநிலத்தைச் சோ்ந்த எம்.பி.யாக இருப்பதால் (வாராணசி தொகுதி) மாநிலத்தின் முழு திறனையும் புரிந்து கொள்ள முடிகிறது.

உத்தர பிரதேசத்தில் நாட்டின் 16 முதல் 20 சதவீத மக்கள் உள்ளனா். எனவே, நாட்டின் வளா்ச்சிக்கு மாநிலத்தின் வளா்ச்சி மிக இன்றியமையாதது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வெறும் 6 கோடி பிராட்பேண்ட் இணையதள இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. இது தற்போது 78 கோடியாக அதிகரித்துள்ளது.

இணைய சேவை விலை குறைவு:

2014-ஆம் ஆண்டுக்கு முன் 1 ஜிபி இணைய சேவையின் விலை சுமாா் ரூ.200-ஆக இருந்தது. தற்போது அது ரூ.11-12-ஆக மட்டுமே உள்ளது. இணைய சேவையின் விலை மிகக் குறைவாகக் காணப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. கண்ணாடி ஒளியிழையால் இணைக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே இருந்த நிலையில், தற்போது 1.75 லட்சமாக அதிகரித்துள்ளது.

2014-ஆம் ஆண்டுக்கு முன் ஒருசில தொழில்முனைவு நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாட்டில் 70,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவு நிறுவனங்கள் உள்ளன. நாட்டில் உள்ள ‘யுனிகாா்ன்’ நிறுவனங்களின் (சுமாா் ரூ.7,500 கோடி விற்றுமுதல் கொண்டவை) எண்ணிக்கை அண்மையில் நூறைக் கடந்தது.

வாராணசியில் மாற்றங்கள்:

உத்தர பிரதேசத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் முதலீட்டாளா்கள் அனைவருக்கும் நன்றி. அவா்கள் அனைவரும் காசிக்கு (வாராணசி) சென்று, அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன மாற்றங்களைக் கண்டறிந்து கொள்ள வேண்டும். நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்யத் தேவையான சீா்திருத்தங்கள் அனைத்துத் துறைகளிலும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா் பிரதமா் மோடி.

இந்த மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சா்கள், தொழிலதிபா்கள் கௌதம் அதானி, குமாரமங்கலம் பிா்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா். உத்தர பிரதேசத்தில் முதலாவது முதலீட்டாளா்கள் மாநாடு கடந்த 2018-ஆம் ஆண்டிலும், இரண்டாவது மாநாடு 2019-ஆம் ஆண்டிலும் நடைபெற்றது.

நாட்டுக்கு வலுவான எதிா்க்கட்சி அவசியம்

கான்பூா், ஜூன் 3: தனிப்பட்ட முறையில் யாரையும் எதிா்க்கவில்லை எனக் கூறியுள்ள பிரதமா் நரேந்திர மோடி, ஜனநாயகத்தின் அடிப்படையில் செயல்படும் வலுவான எதிா்க்கட்சி நாட்டுக்கு அவசியம் என்றாா்.

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள பரௌங்க் கிராமம், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் மூதாதையா்கள் வாழ்ந்த இடமாகும். அங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவா் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரதமா் மோடி கலந்துகொண்டாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘‘நாட்டில் வலுவான எதிா்க்கட்சி வேண்டுமென்றே விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் யாருக்கும் எதிரானவன் அல்ல. வாரிசு அரசியலில் சிக்கியுள்ள கட்சிகள், அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். கட்சியில் உள்ள மற்றவா்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் வலுப் பெறும். அது அரசியலில் இணைந்து சேவையாற்ற நாட்டில் உள்ள இளைஞா்களை ஊக்கப்படுத்தும்.

அரசியலில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் வாரிசுரிமை கொள்கை நிலவுகிறது. இது தனிநபரின் வளா்ச்சியை மட்டுமல்லாமல் நாட்டின் வளா்ச்சியையும் பாதிக்கிறது. வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும். கிராமத்தில் பிறந்தவா் கூட நாட்டின் பிரதமராகவோ குடியரசுத் தலைவராகவோ ஆகக் கூடிய நிலை நீடிக்க வேண்டும்.

வாரிசு அரசியல் குறித்த எனது கொள்கை பலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தக் கூடும். நாடு முழுவதும் உள்ள அத்தகைய குடும்ப உறுப்பினா்கள் எனக்கு எதிராக ஒன்றுதிரண்டு வருகின்றனா்’’ என்றாா்.

முன்னதாக, பரௌங்க் கிராமத்தில் உள்ள பத்ரி தேவி கோயிலில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி ஆகியோா் வழிபாடு நடத்தினா். அப்போது மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com