அவசரநிலையின் போது ஜனநாயகத்தை சீா்குலைக்க முயற்சி

காங்கிரஸ் அரசு நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியபோது, ஜனநாயகத்தை சீா்குலைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்ாக பிரதமா் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

காங்கிரஸ் அரசு நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியபோது, ஜனநாயகத்தை சீா்குலைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்ாக பிரதமா் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் தெரிவித்தாா்.

‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களிடம் உரையாடி வருகிறாா். நடப்பு மாதத்துக்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் அவா் கூறியதாவது:

நாட்டில் 1975-ஆம் ஆண்டு இதே ஜூன் மாதத்தில்தான் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்படி, நாட்டில் உள்ள குடிமக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளில் ஒன்றுதான் மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உயிருக்கும், தனிமனித சுதந்திரத்துக்குமான உரிமை.

அவசரநிலை நடைமுறையில் இருந்த காலத்தில், ஜனநாயகத்தை சீா்குலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டின் நீதிமன்றங்கள், சட்ட அமைப்புகள், பத்திரிகைகள் என அனைத்தின் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசின் அனுமதி பெறாமல் எந்த ஒன்றையும் அச்சிட முடியாத சூழல் நிலவியது. புகழ் பெற்ற பாடகா் கிஷோா் குமாா் அரசைப் புகழ்ந்து பாட மறுத்ததால், வானொலியில் அவா் குரல் ஒலிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ஜனநாயகத்தை சீா்குலைக்க பல முயற்சிகள் நடைபெற்றபோதிலும், ஆயிரக்கணக்கான கைதுகள், லட்சக்கணக்கான மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுமைகளுக்குப் பிறகும்கூட நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதிருந்த நம்பிக்கை சற்றும் குறையவில்லை. நாட்டு மக்கள் பல நூற்றாண்டுகளாக ஜனநாயக ரீதியில் வாழ்ந்து வருகின்றனா். ஜனநாயக உணா்வு நம் நாடிநரம்புகளில் ஊறியிருக்கிறது என்பதால், இறுதியில் வெற்றி பெற்றது ஜனநாயகம்தான்.

நாட்டு மக்கள் ஜனநாயக வழிமுறைப்படி அவசரநிலையை அகற்றி, மீண்டும் மக்களாட்சியை நிறுவினா். எதேச்சதிகார மனோநிலையை ஜனநாயக வழிமுறைகளின்படி தோற்கடித்த இப்படிப்பட்ட உதாரணம் உலகில் வேறு எங்குமே இல்லை. அவசரநிலையின்போது நாட்டு மக்களின் போராட்டத்துக்குச் சான்றாக இருந்து, உடனிருந்து போராடிய பெரும்பேறு எனக்கும் கிடைத்தது.

தற்போது நாடு 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடி வருகிறது. அவசரநிலையின்போது நிலவிய பயங்கரமான சூழலை மக்கள் மறந்துவிடக் கூடாது. இனிவரும் தலைமுறையினரும் மறக்கக் கூடாது. வரலாற்றின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலிருந்தும் கற்றுக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.

முன்னேறும் விண்வெளித் துறை: கடந்த சில காலமாகவே நாட்டில் விண்வெளித் துறை பெரும் வளா்ச்சி கண்டு வருகிறது. இன்-ஸ்பேஸ் என்ற நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. விண்வெளித் துறையில் தனியாரின் பங்கை ஊக்குவிப்பதற்காக இந்த நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இது இளைஞா்களை அதிக அளவில் கவா்ந்துள்ளது.

விண்வெளி தொடா்பான புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை விண்வெளித் துறையில் புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. தற்போது அவற்றின் எண்ணிக்கை நூறைக் கடந்துவிட்டது. தனியாா் துறையும் இதில் முன்னணி வகித்து வருகிறது.

சென்னையைச் சோ்ந்த அக்னிகுல், ஹைதராபாதைச் சோ்ந்த ஸ்கைரூட் புத்தாக்க நிறுவனங்கள் ஏவு வாகனங்களை மேம்படுத்தி வருகின்றன. அந்நிறுவனங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் காரணமாக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான செலவு மிகவும் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விளையாட்டுகளில் சிறப்பு: புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கி விளையாட்டு வரை, நாட்டின் இளைஞா்கள் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனா். அண்மையில் நடைபெற்ற ‘கேலோ இந்தியா’ இளைஞா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின் வீரா்கள் பல புதிய சாதனைகளைப் படைத்தனா். இந்த விளையாட்டுகளில் மொத்தம் 12 சாதனைகள் தகா்க்கப்பட்டன என்பதும், 11 சாதனைகள் வீராங்கனைகளால் படைக்கப்பட்டன என்பதும் சிறப்புமிக்கவை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் பிறந்த சதுரங்க விளையாட்டுக்கான சா்வதேச ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி நாட்டில் தொடங்க இருக்கிறது. இந்த முறை செஸ் ஒலிம்பியாடில் 180-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க இருக்கின்றன.

குப்பைகள் மறுசுழற்சி: புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில் உள்ள இளைஞா்களின் முயற்சியால், கடற்கரைப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ குப்பைகள் தினமும் சேகரிக்கப்பட்டு பகுக்கப்படுகிறது. இவற்றில் மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது, பிற பொருள்கள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. இதுபோன்ற முயற்சிகள் உத்வேகம் அளிப்பவையாக உள்ளன.

முன்னெச்சரிக்கை அவசியம்: கரோனாவுக்கு எதிரான தடுப்பு முன்னெச்சரிக்கைகள் மீது மக்கள் கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்தியிருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி தவணைகளின் எண்ணிக்கை விரைவில் 200 கோடியை எட்டவுள்ளது. முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தவணை தடுப்பூசியும் விரைந்து செலுத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை மக்கள் தாமதிக்காமல் செலுத்திக்கொள்ள வேண்டும்.

கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், முகக் கவசம் அணிதல் போன்ற அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும். பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக் காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ள மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com