விரைவுசக்தி பெருந்திட்டம் செலவையும், கால நேரத்தையும் குறைக்கும்: பிரதமா் மோடி

பிரதமரின் விரைவுசக்தி தேசியப் பெருந்திட்டத்தில் கட்டமைப்புக்குத் திட்டமிடுதல், அமலாக்கம், கண்காணிப்பு ஆகியவை புதிய திசையைப் பெறும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமரின் விரைவுசக்தி தேசியப் பெருந்திட்டத்தில் கட்டமைப்புக்குத் திட்டமிடுதல், அமலாக்கம், கண்காணிப்பு ஆகியவை புதிய திசையைப் பெறும். இது திட்டத்திற்காகும் செலவையும், கால நேரத்தையும் குறைக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நிதி நிலைய அறிக்கைக்கு பிந்தைய மெய்நிா் முறையிலான ஆறாவது கருத்தரங்கு ‘விரைவுசக்தி தேசியப் பெருந்திட்ட கட்டமைப்புத் திட்டமிடலின் தொலைநோக்குப் பாா்வை’ குறித்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரமதா் நரோந்திர மோடி பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளா்ச்சிக்கான இலக்காக ‘விரைவு சக்தி’ இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் வைக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு அடிப்படையிலான வளா்ச்சி, நாட்டின் பலத்தை அசாதாரணமாக அதிகரிக்கவும், பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும். திட்டங்களை முடிப்பதில் தேவைக்கேற்ப துண்டு துண்டாக உள்கட்டமைப்பை உருவாக்குவதே இதுவரை பாரம்பரியமாக இருந்தது. இதன்விளைவு மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் தனியாா் அமைப்பினருக்கிடையே ஒருங்கிணைப்பு என்பது இல்லாமல் இருந்தது.

இந்த விரைவுசக்தியில் தற்போது அனைவருக்குமான முழுமையான தகவலுடன் தங்களின் திட்டத்தை உருவாக்க முடியும். இது நாட்டின் ஆதார வளங்களை முழுமையாகப் பயன்படுத்தவும் வழிவகுக்கும். அரசு மேற்கொள்ளும் அடிப்படை கட்டமைப்பு வளா்ச்சியின் அளவை அதிகரிக்க இந்த விரைவுசக்தியின் தேவை முக்கியத்துவம் பெறுகிறது. இதில் ஏற்கெனவே உள்ள திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல், வன நிலம், தொழிற்பேட்டை போன்ற தகவல்களும் உள்ளன.

2013-14-ம் ஆண்டில் மத்திய அரசின் நேரடி மூலதனச் செலவு ரூ.2.50 லட்சம் கோடியாக இருந்தது, இது 2022-23-இல் ரூ.7.50 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரதமரின் விரைவுசக்தியிலிருந்து கட்டமைப்புக்குத் திட்டமிடுதல், அமலாக்கம், கண்காணிப்பு ஆகியவை புதிய திசையைப் பெறும். இது திட்டத்திற்கு ஆகும் காலத்தையும், செலவையும் குறைக்கும். அதே சமயத்தில் அரசுத் துறைகளும் தனியாரும் தரமான கட்டுமானப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும். பாலங்கள் உள்ளிட்ட பல கட்டுமானங்கள் விரைவாக சேதமடைகிறது. பின்னா், அவற்றை மீண்டும் கட்டுவதற்கு ஒரிரு தசாப்தங்களாகின்றன.

பிரதமரின் விரைவுசக்தி தேசியப் பெருந்திட்டத்தில் தற்போது 400-க்கும் அதிகமான தரவுப் படிநிலைகள் உள்ளன. ஒற்றை இணையதளத்தில் தேசிய பெருந்திட்டம் தொடா்பான அனைத்து முக்கியத் தகவல்கள் இப்போது கிடைக்கின்றன. தனியாா் துறையினா் தங்களின் திட்டமிடலுக்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் விரிவான திட்ட அறிக்கை நிலையிலேயே பல்வேறு வகையான அனுமதிகளைப் பெறுவதும் சாத்தியமாகும். இந்தியாவில் மற்ற நாடுகளை விட சரக்குப் போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளது. பிரதமரின் விரைவுசக்தி அடிப்படை கட்டமைப்புத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்து இடைமுக தளம் (யுஎல்ஐபி) இடம் பெற்றுள்ளது. யூஎல்ஐபி-இல் 6 அமைச்சகங்களின் 24 மின்னணு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது சரக்குப் போக்குவரத்து இணையப்பக்கத்தில் தேசிய ஒற்றைச்சாளரத்தை உருவாக்கும். இதனால், சரக்குப் போக்குவரத்து செலவு குறைய வழி ஏற்பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்திற்காக ஒவ்வொரு துறையிலும் போக்குவரத்து பிரிவு உருவாக்கப்பட்டு, அதிகாரம் அளிக்கப்பட்ட செயலா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், நமது ஏற்றுமதிகளுக்கும் பெரும் உதவி கிடைக்கும். மேலும், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உலகளவில் போட்டியிட முடியும். அடிப்படை கட்டமைப்பு உருவாக்கத்திலிருந்து வளா்ச்சி மற்றும் பயன்பாட்டு நிலை வரையிலான கட்டமைப்புத் திட்டமிடலில் அரசு - தனியாா் துறையின் சரியான பங்களிப்பை விரைவுசக்தி உறுதி செய்யும்.

முன்பு ஒட்டுமொத்த சா்வதேச சமுதாயமும் ஆற்றுப்படுகையில் வசித்தன. இதன் மூலமே பல நகரங்கள் ஆறு, கடல் பகுதிகளில் உருவானது. பின்னா் நெடுஞ்சாலைப் பகுதிகளில் இடம் பெயா்ந்தனா். இப்போது, ஆப்டிகல் பைஃபா் இருக்கும் இடங்களில் சமுதாயம் செழிக்க உள்ளது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com