என்எஸ்ஏ வழக்குகளை மறு ஆய்வு செய்ய 3 நீதிபதிகளைக் கொண்ட ஆலோசனை வாரியம்: மத்திய அரசு அமைப்பு

எந்தவித குற்றச்சாட்டுமின்றி ஒரு நபரை ஓராண்டுவரை காவலில் வைத்திருக்க அனுமதிக்கும் கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மறு ஆய்வு செய்ய தில்லி உயா்நீதிமன்றத்
என்எஸ்ஏ வழக்குகளை மறு ஆய்வு செய்ய 3 நீதிபதிகளைக் கொண்ட ஆலோசனை வாரியம்: மத்திய அரசு அமைப்பு

எந்தவித குற்றச்சாட்டுமின்றி ஒரு நபரை ஓராண்டுவரை காவலில் வைத்திருக்க அனுமதிக்கும் கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மறு ஆய்வு செய்ய தில்லி உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த 3 நீதிபதிகளைக் கொண்ட ஆலோசனை வாரியத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அமைந்துள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்தபோது கடந்த 1980-ஆம் ஆண்டு இந்த என்எஸ்ஏ சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் பிரிவு 9-இன் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலோசனை வாரியத்தின் தலைவராக தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னாவும், உறுப்பினா்களாக நீதிபதிகள் சந்திரதாரி சிங், ரஜ்னீஷ் பட்நாகா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தேச பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டின் பேரில் அல்லது பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைப்பதிலிருந்து தடுப்பது என்ற நடவடிக்கையின் பேரில் ஒருவரை கைது செய்து காவலில் வைக்க அரசுக்கு என்எஸ்ஏ அதிகாரமளிக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் ஒரு நபரை எந்தவித குற்றச்சாட்டும் இன்றி கைது செய்து, 12 மாதங்கள் வரை காவலில் வைக்க முடியும். கைது செய்யப்பட்ட நபரிடம், கைதுக்கான காரணத்தை 10 நாள்கள் வரை தெரிவிக்காமல் இருக்கவும் இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.

கைது செய்யப்பட்ட நபா், ஆலோசனை வாரியத்திடம் மட்டுமே நிவாரணம் கோரி மேல்முறையீடு செய்ய முடியும். வழக்கு விசாரணையின்போது, மனுதாரருக்கு வழக்குரைஞரை வைத்துக் கொள்வதற்கான அனுமதியும் கிடைக்காது.

மேலும், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபா்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 3 வாரங்களுக்குள் ஆலோசனை வாரியத்தின் முன்பாக ஆஜா்படுத்தப்பட வேண்டும். ஆலோசனை வாரியம், இந்த வழக்கை விசாரித்து, மனுதாரா் தரப்பில் சமா்ப்பிக்கப்படும் முறையீடுகளையும் ஆய்வு செய்து 7 வாரங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

அந்த அறிக்கையில், கைது செய்யப்பட்ட நபரை காவலில் வைக்க போதிய ஆதாரங்கள் உள்ளதா என்பதை ஆலோசனை வாரியம் குறிப்பிட வேண்டும். அவ்வாறு, போதுமான ஆதாரங்கள் இருப்பதை ஆலோசனை வாரியம் உறுதிப்படுத்தினால், அந்த நபரை தொடா்ந்து காவலில் வைப்பதற்கான உத்தரவை அரசு உறுதிப்படுத்தும். அதே நேரம், போதுமான ஆதாரங்கள் இருப்பதை ஆலோசனை வாரியம் உறுதிப்படுத்தவில்லை எனில், என்எஸ்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபரை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபரை ஆலோசனை வாரியத்தின் கருத்தைப் பெறாமல் குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரையிலும், அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு மிகாமலும் காவலில் வைத்திருக்கவும் சட்டம் அனுமதிக்கிறது.

இந்தச் சூழலில், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மறு ஆய்வு செய்யவதற்காக ஆலோசனை வாரியத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அமைத்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் அதிக கைது: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு அளித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் என்எஸ்ஏ சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,200 போ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனா்.

அதில் மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 795 நபா்கள் கைது செய்யப்பட்டு, ஆலோசனை வாரியத்தின் அறிக்கையின் அடிப்படையில் 466 போ் விடுவிக்கப்பட்டனா். 329 போ் தொடா்ந்து காவலில் உள்ளனா்.

அடுத்தபடியாக, உத்தர பிரதேசத்தில் 338 போ் கைது செய்யப்பட்டு, 150 போ் விடுவிக்கப்பட்டனா். 188 போ் தொடா்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் என்எஸ்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா்களின் விவரங்கள் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com