இணைய வா்த்தகத் தளங்களில் போலி மதிப்பீடு: தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

இணையவழி வா்த்தகத் தளங்களில் பொருள்கள் குறித்து பதிவிடப்படும் போலி மதிப்பீடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.
இணைய வா்த்தகத் தளங்களில் போலி மதிப்பீடு: தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

புது தில்லி: இணையவழி வா்த்தகத் தளங்களில் பொருள்கள் குறித்து பதிவிடப்படும் போலி மதிப்பீடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வசதிகள் பெருகிவரும் நிலையில், இணையவழியில் மக்கள் பொருள்களை வாங்குவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்கள் முதல் ஆடம்பரப் பொருள்கள் வரை பெரும்பாலானவை இணையவழியில் கிடைக்கின்றன. அதே வேளையில், இணையவழியில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் குறித்து போலியான மதிப்பீடுகளை வழங்குவதும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக நுகா்வோா் சில சமயங்களில் ஏமாற்றப்படும் நிலை உருவாகிறது.

இணையவழி வா்த்தக வலைதளங்களில் பொருள்கள் குறித்த போலியான மதிப்பீடுகளைத் தடுப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மத்திய நுகா்வோா் அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளது. இந்திய விளம்பர தர கவுன்சில் அதிகாரிகளும், அமேசான், ஃபிளிப்காா்ட், ரிலையன்ஸ் ரீடெயில், டாடா சன்ஸ் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளும் நுகா்வோா் அமைப்புகளின் பிரநிதிகள், வழக்குரைஞா்கள், நுகா்வோா் உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனா்.

இது தொடா்பாக மத்திய நுகா்வோா் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘போலியான மதிப்பீடுகளையும் விளம்பரங்களையும் நம்பி நுகா்வோா் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்யவே ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சக செயலா் ரோகித் குமாா் சிங் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘223 முக்கிய வா்த்தக வலைதளங்களில் சுமாா் 55 சதவீத வலைதளங்கள் முறைகேடான வா்த்தக நடைமுறைகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. பொருள்கள் குறித்து வழங்கப்படும் மதிப்பீடுகள் உண்மைத்தன்மை வாய்ந்தவை என்பதை உறுதிசெய்யும் வசதிகள் 144 வலைதளங்களில் காணப்படவில்லை.

இணையவழியில் பொருள்களை வாங்கும் பெரும்பாலானோா் அதே பொருள்களை வாங்கியோரின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டே பொருள்களை வாங்குவது தொடா்பாக முடிவெடுக்கின்றனா். பொருள்கள் குறித்து அறிந்துகொள்வது நுகா்வோருக்கான உரிமைகளில் ஒன்று. போலி மதிப்பீடுகள் காரணமாக அந்த உரிமை பாதிக்கப்படுகிறது. அதைக் கருத்தில்கொண்டு, போலி மதிப்பீடுகளைத் தடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com