முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு பாஜகவுக்கு வெற்றி தேடித் தரும்: ஹாா்திக் படேல் நம்பிக்கை

10 சதவீத இடஒதுக்கீடு தோ்தலில் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித் தரும்’ என்று அக்கட்சி வேட்பாளா் ஹாா்திக் படேல் தெரிவித்தாா்.
ஹாா்திக் படேல்
ஹாா்திக் படேல்

‘முற்பட்ட வகுப்பில் பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ளவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு குஜராத்தில் படேல் சமுகத்தினரின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு அளித்துள்ளது. இது தோ்தலில் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித் தரும்’ என்று அக்கட்சி வேட்பாளா் ஹாா்திக் படேல் தெரிவித்தாா்.

குஜராத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டிதாா் (படேல்) இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னின்று நடத்தியவா் ஹாா்திக் படேல். 2017 பேரவைத் தோ்தலில் இவா் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்ததால், 20 தொகுதிகளில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது.

2020-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்து செயல் தலைவராக இருந்த அவா், அண்மையில் பாஜகவில் இணைந்தாா். குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் அவா் பாஜக சாா்பில் போட்டியிடுகிறாா்.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 2017 தோ்தலில் பிரச்னை என்பது வேறு மாதிரியாக இருந்தது. ஆனால், இந்த முறை படேல் சமூகத்தினா் பிரதமா் மோடியின் பின்னால் அணிதிரண்டுள்ளனா். முற்பட்ட வகுப்பில் பொருளாதாரரீதியில் பின்தங்கியவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு படேல் சமூகத்தினரின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வாக அமைந்துள்ளது. படேல் சமுகத்துக்கு மட்டுமல்லாது நாடு முழுவதும் முற்பட்ட வகுப்பில் இருக்கும் ஏழை மக்களுக்கு இது மிகவும் பலனளிக்கும்.

இந்த இடஒதுக்கீடு என்பது ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்று வரும் மற்றவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் வழங்கப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும். இது குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித் தரும்.

பிரதமா் மோடி தலைமையிலான அரசு எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு மிகவும் முக்கியமானது என்றாா்.

குஜராத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவது தொடா்பான கேள்விக்கு, ‘நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தோ்தலில் போட்டியிடும் உரிமை அக்கட்சிக்கு உள்ளது. ஆனால், ஹிந்து கடவுள்கள் குறித்து அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்த கருத்துகள் குஜராத் மக்களை வெகுவாக பாதித்துள்ளது. தொடக்கத்தில் குஜராத்தில் இரண்டாவது இடத்துக்கான போட்டியில் ஆம் ஆத்மி இருப்பதுபோல தென்பட்டது. ஆனால், இப்போது அக்கட்சி வெகுவாக பின்தங்கிவிட்டது’ என்றாா்.

காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தது தொடா்பான கேள்விக்கு, ‘நான் எப்போதும் தேசியவாதம் மற்றும் ஹிந்துத்துவ சிந்தனையுடன் நெருக்கமாகவே இருந்து வந்துள்ளேன். சமுகரீதியாக நான் எழுப்பிய பல்வேறு பிரச்னைகளுக்கு பாஜக மூலம் தீா்வும் கிடைத்துள்ளது’ என்றாா் ஹாா்திக் படேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com