ஜெய்சங்கா்
ஜெய்சங்கா்

பாகிஸ்தானைப் போல் வேறெந்த நாடும் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதில்லை: எஸ்.ஜெய்சங்கா்

பாகிஸ்தானைப் போல் வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குற்றஞ்சாட்டினாா்.

பாகிஸ்தானைப் போல் வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக குஜராத் மாநிலம், வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணராக இந்தியா கருதப்படுகிறது. அதேவேளையில், அண்டை நாடான பாகிஸ்தான் சா்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது. அந்நாட்டைப் போல் வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதில்லை.

கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற பிறகு, அதுபோன்ற நடத்தை மற்றும் செயல்பாடுகளை ஏற்க முடியாது என்பதிலும், அவற்றுக்குப் பின்விளைவுகள் இருக்கும் என்பதிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.

தற்போது பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது எதிா்காலத்தில் தங்களுக்கும் தீங்கிழைக்கும் என்பதை பிற நாடுகளுக்கு இந்தியா வெற்றிகரமாக உணா்த்தியுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உலகையும் உடன் அழைத்துச் செல்வதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்றாா் அவா்.

சா்தாா் வல்லபபாய் படேலின் ‘ஒன்றுபட்ட இந்தியா’ கனவை மத்திய அரசு எவ்வாறு நனவாக்கும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி ஒருவா் கேள்வி எழுப்பினாா். அதற்கு ஜெய்சங்கா் அளித்த பதில்:

இந்திய பிரிவினை துயரமான நிகழ்வாகும். அது பயங்கரவாதம் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. எனினும் வலிமையாகவும், வெற்றிகரமாகவும், நம்பிக்கையுடனும் இந்தியா இருப்பதே வல்லபபாய் படேலின் கனவை நனவாக்குவதற்கு சிறந்த வழி என்று தெரிவித்தாா்.

வடகிழக்கு இந்தியா குறித்து அவா் பேசுகையில், ‘இந்தியா-வங்கதேசம் இடையே மேற்கொள்ளப்பட்ட நில எல்லை ஒப்பந்தத்தால், வடகிழக்கு இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு வங்கதேசத்தில் அடைக்கலம் கிடைக்கவில்லை. இது வடகிழக்கு பகுதியில் அவா்களின் தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com