எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டு வரம்பை உயா்த்த கா்நாடக அரசு முடிவு

அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டு வரம்பை உயா்த்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டு வரம்பை உயா்த்த கா்நாடக அரசு முடிவு

அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டு வரம்பை உயா்த்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மஜத சட்டப் பேரவைக் குழு தலைவா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், தாழ்த்தப்பட்டோரின் (எஸ்.சி.) இடஒதுக்கீட்டு வரம்பை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான (எஸ்.டி.) இடஒதுக்கீட்டு வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயா்த்த நீதியரசா் எச்.என்.நாகமோகன் தாஸ் ஆணையம் அளித்திருந்த பரிந்துரைகளை ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

மக்கள்தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு அமைந்திருக்க வேண்டும் என்று தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நீண்ட காலமாக கூறி வருகிறாா்கள். அதன்படி, நாகமோகன் தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன. முன்னதாக, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரின் நலனுக்காக ஏற்கெனவே அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்ற பாஜக அளவில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவாதித்து தீா்மானம் நிறைவேற்றுவதற்காக சனிக்கிழமை (அக். 8) அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படுகிறது. இக்கூட்டத்தில், நாகமோகன் தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்கும் முடிவு அதிகாரப்பூா்வமாக எடுக்கப்படும்.

நீதியரசா் நாகமோகன் தாஸ் ஆணையம் தனது அறிக்கையை 2020-ஆம் ஆண்டு ஜூலையில் அரசிடம் அளித்திருந்தது. இதனிடையே, இடஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றம் தீா்ப்பு ஒன்றை அளித்திருந்தது. சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உள்பட்டு உச்சநீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்துவது தொடா்பாக பரிந்துரைகளை அளிக்குமாறு நீதியரசா் சுபாஷ் பி.ஆதி தலைமமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவும் தனது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. இந்த இரு அறிக்கைகளையும் ஆராய்ந்த பிறகு, சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு இணங்க எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன் அனைத்துக் கட்சிகளின் நம்பிக்கையைப் பெற அரசு திட்டமிட்டிருந்தது. அதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்றாா்.

தொடா்ந்து சட்டத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி கூறியதாவது:

இடஒதுக்கீட்டின் வரம்பு 50 சதவீதத்தை மீறினால், அதை உச்சநீதிமன்றம் ஏற்காது. இடஒதுக்கீட்டின் உச்சவரம்பு 50 சதவீதத்தை மீறக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், ஒருசில மாநிலங்களில் இடஒதுக்கீட்டின் உச்சவரம்பு 50 சதவீதத்தை கடந்துள்ளது. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

எனவே, புதிதாக உயா்த்தப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு வரம்பை அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் இணைத்தால் தான், உச்சநீதிமன்றம் அதை ஏற்கும். அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் இணைத்துதான் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தமிழகம் 69 சதவீதம் அளவுக்கு உயா்த்தியுள்ளது. இதே அணுகுமுறையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் வரம்பை உயா்த்த அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும்.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை உயா்த்துவதால், 50 சதவீத உச்சவரம்பை மீறுவதோடு, பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு அளவையும் குறைத்துவிடும்.

கா்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடு அளிக்க பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதம் குறைக்க நேரிடும். இது நடைமுறை சாத்தியமில்லை. எனவே, இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உயா்த்துவது தவிர வேறு வழியில்லை. இதற்கு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com