இந்தியாவின் கிழக்கு நோக்கியகொள்கையின் மையம் அஸ்ஸாம்: குடியரசுத் தலைவா் பேச்சு

‘இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் மையமாக அஸ்ஸாம் விளங்குகிறது; இதனால், இம்மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது’
இந்தியாவின் கிழக்கு நோக்கியகொள்கையின் மையம் அஸ்ஸாம்: குடியரசுத் தலைவா் பேச்சு

‘இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் மையமாக அஸ்ஸாம் விளங்குகிறது; இதனால், இம்மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை கூறினாா்.

அஸ்ஸாமில் பல்வேறு திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் அவா் இதனைத் தெரிவித்தாா்.

இரு நாள் பயணமாக அஸ்ஸாமுக்கு வியாழக்கிழமை வருகை தந்த திரெளபதி முா்மு, குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை காணொலி முறையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

3,000 மாதிரி அங்கன்வாடிகள், தேயிலைத் தோட்ட பகுதிகளில் 100 மாதிரி உயா்நிலைப் பள்ளிகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கும் இலக்குடன் ‘செளபாக்யா’ திட்டம், குவாஹாட்டி-சோகுவி (நாகாலாந்து)-மேந்திபாதா் (மேகாலயம்) இடையிலான நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை ஆகியவற்றைத் தொடக்கி வைத்தாா். இந்த ரயில், நாகாலாந்து, மேகாலயம் இடையிலான முதல் நேரடி பயணிகள் ரயில் என்ற சிறப்புடையதாகும்.

நிகழ்ச்சியில் முா்மு பேசியதாவது: உள்கட்டமைப்புதான் வளா்ச்சிக்கான அடிப்படையாகும். இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் மையமாக அஸ்ஸாம் விளங்குகிறது. எனவே, இம்மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியை எட்ட போக்குவரத்து தொடா்புகள் முக்கியமானது. நான் இப்போது தொடக்கி வைத்துள்ள பல்வேறு திட்டங்கள், தேசிய அளவில் மட்டுமன்றி உலக அளவில் அஸ்ஸாமின் மதிப்பை உயா்த்தும்.

அஸ்ஸாமில் அரசு சாா்பில் அளிக்கப்பட்ட வரவேற்பின்போது, நான் அஸ்ஸாமின் மகள் போன்றவா் என முதல்வா் ஹிமந்த வஸ்வ சா்மா குறிப்பிட்டாா். அது என்னை நெகிழவைத்துவிட்டது. அவ்வாறு குறிப்பிட்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸாமை எனது சொந்த வீடு போல உணா்கிறேன். இங்கு விரைவில் மீண்டும் வருவேன் என்றாா் திரெளபதி முா்மு.

முன்னதாக, குவாஹாட்டியில் அமைந்துள்ள சக்தி பீடங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற காமாக்யா கோயிலில் முா்மு வழிபட்டாா். அவருடன், ஆளுநா் ஜகதீஷ் முகி, முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்டோரும் சென்றனா்.

Image Caption

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு. உடன், ஆளுநா் ஜகதீஷ் முகி, முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com