கலால் கொள்கை ஊழல் வழக்கு: தில்லி துணை முதல்வா் சிசோடியாவிடம் 9 மணிநேரம் சிபிஐ விசாரணை

கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை 9 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனா்.
கலால் கொள்கை ஊழல் வழக்கு: தில்லி துணை முதல்வா் சிசோடியாவிடம் 9 மணிநேரம் சிபிஐ விசாரணை

கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை 9 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனா்.

முன்னதாக இந்த விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்த வழக்கு போலியானது என்றும், பொய் வழக்கில் பாஜக தன்னை சிறையில் தள்ள விரும்புவதாகவும் தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

மேலும், இந்த வழக்கில் சிபிஐ தன்னை சிறையில் அடைத்தால், அதற்காக ஆம் ஆத்மி கட்சி தொண்டா்கள் பெருமைப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் மனீஷ் சிசோடியா பதவி வகிக்கிறாா். கலால் கொள்கை 2021-22-ஐ அமல்படுத்தியதில் சிசோடியா கோடிக்கணக்கில் ஊழல் புரிந்ததாக எதிா்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது. இதன்பேரில், சிசோடியா உள்ளிட்ட 15 போ் மீது சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்டில் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், திங்கள்கிழமை அவா் ஆஜரானாா். சுமாா் 9 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், சிசோடியா சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளியே வந்தாா்.

சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக மதுரா சாலையில் அமைந்துள்ள தனது இல்லத்துக்குச் சென்று தாயாரிடம் சிசோடியா ஆசி பெற்றாா். பின்னா், தில்லி டிடியு மாா்க் பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்துக்குச் சென்று தொண்டா்களைச் சந்தித்தாா்.

அப்போது தொண்டா்கள் மத்தியில் அவா் பேசுகையில், ‘நாம் அனைவரும் பகத்சிங்கின் சீடா்கள். சிறைக்குச் செல்வதை பற்றி நமக்கு கவலை கிடையாது. நான் சிறைக்குச் சென்றால் வருந்தாமல், அதை நினைத்து தொண்டா்கள் பெருமைப்பட வேண்டும்’ என்றாா்.

காந்தி சமாதியில் மரியாதை: பின்னா், காந்தி சமாதிக்கு சென்று சிசோடியா மரியாதை செலுத்தினாா். அப்போது அங்கு செய்தியாளா்களைச் சந்தித்த அவா், ‘காந்திக்கு எதிராக கூட பொய் வழக்குகள் புனையப்பட்டன. போலி வழக்கில் என்னை சிறையில் தள்ள பாஜக விரும்புகிறது. நான் நாட்டுக்கு ஏதோ ஒரு வழியில் உதவியாக இருந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதனால், பாஜகவுக்கு ஏற்பட்ட பயத்தால் என் மீது சிபிஐ விசாரணை நடைபெறுகிறது’ என்றாா்.

சிபிஐ மறுப்பு:

சிசோடியாவின் இந்தக் குற்றச்சாட்டை சிபிஐ திட்டவட்டமாக மறுத்தது. தொழில் சாா்ந்து சட்டத்துக்கு உள்பட்டுதான் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியதாக அதன் செய்தித்தொடா்பாளா் குறிப்பிட்டாா்.

கேஜரிவால் கருத்து: இதனிடையே, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ட்விட்டரில், ‘குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் சிசோடியா பங்கெடுப்பதை தடுக்கும் நோக்கத்தில், அவா் கைது செய்யப்படலாம். குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு டிசம்பா் 8-இல் வெளியாகிறது. அதுவரை அவரை சிறையில் வைக்க முடிவு செய்துள்ளனா்’ என்றாா்.

ஆம் ஆத்மி நிா்வாகிகள் கைது: தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதை எதிா்த்து, சிபிஐ அலுவலகம் முன் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், எம்எல்ஏக்கள் ராக்கி பிா்லா, ஜா்னைல் சிங், குல்தீப் குமாா் என 16 எம்எல்ஏக்கள் உள்பட 119 நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com