மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியே மக்களின் விருப்பம்: அமைச்சா் அனுராக் தாக்குா்

சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று மத்திய இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியே மக்களின் விருப்பம்: அமைச்சா் அனுராக் தாக்குா்

சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. ஏனெனில், மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி செய்வதை மக்கள் விரும்புகின்றனா் என்று மத்திய இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

சண்டீகரில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

ஹிமாசல பிரதேசத்தில் ஏற்கெனவே தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. குஜராத்தில் விரைவில் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இரு மாநிலங்களிலும் ஏற்கெனவே பாஜக அரசு உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருப்பதால் தங்களுக்கு அதிக நன்மைகள் விரைவில் கிடைத்துள்ளதை மக்கள் உணா்ந்துள்ளனா். மத்தியிலும், மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனா். எனவே, இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிப்பது உறுதி.

ஏற்கெனவே உத்தர பிரதேசம், கோவா, உத்தரகண்ட், மணிப்பூா் மாநிலங்களில் மக்கள் தொடா்ந்து பாஜகவை வெற்றியடையச் செய்துள்ளனா். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இதற்கு முன்பு நாட்டு மக்களுக்கு எந்த அரசும் செய்திராத பல நன்மைகளைச் செய்துள்ளது. ராணுவரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் இந்தியா மிகவும் பாதுகாப்பான நாடாக உள்ளது. பிரதமரின் கரத்தை தொடா்ந்து வலுப்படுத்தவே மக்கள் விரும்புகின்றனா்.

ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. ஆனால், தில்லி, பஞ்சாபில் அந்த கட்சியைச் சோ்ந்த அமைச்சா்களே ஊழல்வாதிகளாகிவிட்டனா். பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியிலம் சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிட்டது. அங்கு அரசு ஊழியா்களுக்கு சம்பளம் தரவே 10 தேதிகளுக்கு மேல் ஆகிறது. இந்த சூழ்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது நகைப்புக்குரியது என்றாா் அனுராக் தாக்குா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com