இந்தியாவின் பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் உலகின் சராசரியைவிட குறைவு: ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் அறிக்கையில் தகவல்

வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு உலகின் சராசரியைவிட குறைவாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (யுஎன்இபி) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு உலகின் சராசரியைவிட குறைவாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (யுஎன்இபி) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் காலநிலை மாற்றத்துக்கான 27-ஆவது மாநாடு எகிப்தில் வரும் நவம்பா் மாதம் நடைபெற உள்ள நிலையில், பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் குறித்தான அறிக்கை 2022 வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2015-இல் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் காலநிலை மாற்றத்துக்கான 21-ஆவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற 196 நாடுகள், புவியின் சராசரி வெப்பநிலையைத் தொழில்புரட்சிக்கு முன்பு இருந்ததை விட 1.5 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வைத்திருப்பதை இலக்காக கொண்ட ‘பாரீஸ் ஒப்பந்தத்தை’ மேற்கொண்டன.

பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை நிறைவேற்றுவதில் சா்வேதச சமூகம் பின்தங்கியுள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2020-இல் உலக அளவில் 6.3 டன் கரியமில வாயு வெளியேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கரியமில வாயு வெளியேற்றம் உலகின் சராசரியைக் காட்டிலும் அதிகமாக 14 டன் என்றளவிலும், ரஷியாவின் வெளியேற்றம் 13 டன்னாகவும் உள்ளது. இதனைத் தொடா்ந்து, சீனா 9.7 டன், பிரேசிலும் இந்தோனேசியாவும் 7.5 டன், ஐரோப்பிய ஒன்றியம் 7.2 டன் என்ற அளவிலும் கரியமில வாயுவை வெளியேற்றி உள்ளன.

இந்தியாவின் கரியமில வாயு வெளியேற்றம் உலகின் சராசரியைவிட குறைவாக 2.4 டன் என்ற அளவில் உள்ளது. வளா்ச்சியடையாத நாடுகள் ஆண்டுதோறும் சராசரியாக 2.3 டன் கரியமில வாயுவை வெளியேற்றி வருகின்றன.

மொத்த கரியமில வெளியேற்றத்தில் 3 சதவீதம்:

கரியமில வாயு வெளியேற்றத்தில் ஜி20 நாடுகளுக்கு இடையே அதிக அளவிலான வேறுபாடு காணப்படுகிறது. இந்தியாவின் கரியமில வாயு வெளியேற்றம் ஜி20 உறுப்பு நாடுகளின் சராசரி வெளியேற்றத்தில் பாதியாக உள்ள நிலையில், உறுப்புநாடுகளின் சராசரியைக் காட்டிலும் இரு மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை சவூதி அரேபியா வெளியேற்றுகிறது.

கடந்த 1850 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 3 சதவீதமே என்ற நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்குகள் முறையே 25 சதவீதம் மற்றும் 17 சதவீதமாகும். சீனா 13 சதவீதமும், ரஷியா 7 சதவீதமும் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் பங்கு வகிக்கிறன.

போதிய முன்னேற்றம் இல்லை:

கடந்த ஆண்டு கிளோஸ்கோவில் நடைபெற்ற 26-ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் உலகின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் குறைக்கும் வகையில், தேசிய அளவில் இலக்கை வகுத்து செயலாற்றுவதாக உறுதிபூண்டன. தற்போதைய தரவுகளின்படி, இலக்கை நோக்கிய நாடுகளின் செயல்பாடுகளில் போதிய முன்னேற்றம் இல்லை என சுற்றுச் சூழல் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் இயக்குநா், இங்கா் ஆண்டா்சன் கூறுகையில், ‘இயற்கை நமக்கு ஆண்டுதோறும் கூறிவரும் வெள்ளம், புயல், காட்டுத்தீ போன்ற சொற்களை இவ்வறிக்கை மீண்டும் எடுத்துரைத்துள்ளது. வளிமண்டலத்தை பசுமைக் குடில் வாயுக்களைக் கொண்டு நிரப்புவதை நாம் முற்றிலுமாக உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com