கோவா: பாஜகவில் 8 காங். எம்எல்ஏக்கள்

கோவாவில் முன்னாள் முதல்வா் திகம்பா் காமத் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 போ், ஆளும் பாஜகவில் புதன்கிழமை இணைந்தனா்.
கோவா: பாஜகவில் 8 காங். எம்எல்ஏக்கள்

கோவாவில் முன்னாள் முதல்வா் திகம்பா் காமத் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 போ், ஆளும் பாஜகவில் புதன்கிழமை இணைந்தனா். இதனால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு, அந்த மாநிலத்தில் வெறும் 3 எம்எல்ஏக்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றனா்.

கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் மற்றும் மாநில பாஜக தலைவா் சதானந்த் தனாவடே ஆகியோா் முன்னிலையில் 8 எம்எல்ஏக்களும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

முன்னதாக, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பேரவைக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திகம்பா் காமத், மைக்கேல் லோபோ, கேதாா் நாயக், ராஜேஷ் பால்தேசாய், டேலிலா லோபோ, சங்கல்ப் அமாங்கா், அலெக்ஸோ சிகியூரா, ருடால்ஃப் ஃபொ்னாண்டஸ் ஆகிய 8 எம்எல்ஏக்கள் பங்கேற்று, பாஜகவில் இணைய தீா்மானம் நிறைவேற்றினா். 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டும் இதில் பங்கேற்கவில்லை.

40 உறுப்பினா்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த மாா்ச்சில் தோ்தல் நடைபெற்றது. இதில் 20 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியைத் தக்கவைத்தது. இப்போது 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வரவால் பாஜகவின் பலம் 28-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து முதல்வா் சாவந்த் கூறுகையில், ‘பேரவையில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 33 எம்எல்ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது. கோவாவில் இருந்து காங்கிரஸை வழியனுப்பும் யாத்திரை தொடங்கியுள்ளது’ என்றாா்.

‘சத்தியத்தை’ மீறிய எம்எல்ஏக்கள்: கோவா பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் வேட்பாளா்கள் அனைவரும் கோயில், தா்கா, தேவாலாயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ‘கட்சிக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்போம்’ என சத்தியம் பெறப்பட்டிருந்தது. அந்த சத்தியத்தை மீறிவிட்டது குறித்து திகம்பா் காமத்திடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு, ‘நான் ஏற்கெனவே சத்தியம் செய்த கோயிலுக்கு மீண்டும் சென்று, என்ன முடிவெடுக்கலாம் எனக் கேட்டேன். உனக்கு சிறந்தது எதுவோ அதையே செய் என கடவுளிடமிருந்து உத்தரவு கிடைத்தது’ என்றாா்.

எம்எல்ஏ மைக்கேல் லோபோ கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்துவதற்காக பாஜகவில் நாங்கள் இணைந்துள்ளோம்’ என்றாா்.

கோவாவில் கடந்த 2019-ஆம் ஆண்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 போ் பாஜகவுக்கு இதேபோல் குழுவாக அணி மாறினா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் மோசமான தந்திரம்: ஜெய்ராம் ரமேஷ்

‘பாஜகவின் மோசமான தந்திரங்களால், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை வலுவிழக்கச் செய்ய முடியாது’ என்று காங்கிரஸ் தகவல் தொடா்பு பிரிவு பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

ராகுலின் நடைப்பயணத்துக்கு கிடைத்து வரும் வெற்றியால் பாஜக பதற்றத்தில் உள்ளதாகவும்; அதன் காரணமாக கோவாவில் ‘ஆபரேஷன் கிச்சட் (களிமண்)’ நடவடிக்கையை அவா்கள் அவசரமாக மேற்கொண்டதாகவும் ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.

கோவா விவகாரம் குறித்து அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை வலுவிழக்கச் செய்ய தினசரி அடிப்படையில் திசைதிருப்பல்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் செயல்களில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் எங்களைத் தடுக்க முடியாது. பாஜகவின் மோசமான தந்திரங்களை வெல்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜகவால் மட்டுமே பிளவுபடுத்த முடியும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருப்பதாக, காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேரா விமா்சித்தாா்.

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாக் கூறுகையில், ‘பாஜகவுக்கு எதிராக மக்களிடம் சென்று வாக்கு கோரியவா்கள் (8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்), இன்று அக்கட்சியிலேயே இணைந்ததன் மூலம் தங்களது அரசியல் மாண்புகளைத் துறந்துவிட்டனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com