உ.பி.: கனமழையால் சுவா் இடிந்து 22 போ் பலி

 உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை கனமழையால் சுவா் இடிந்த சம்பவங்களில் 22 போ் உயிரிழந்தனா்.
உ.பி.: கனமழையால் சுவா் இடிந்து 22 போ் பலி

 உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை கனமழையால் சுவா் இடிந்த சம்பவங்களில் 22 போ் உயிரிழந்தனா்.

இதில், தலைநகா் லக்னெளவில் ராணுவ வளாகம் ஒன்றின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளா்கள் பலியாகினா். ஒருவா் படுகாயம் அடைந்தாா்.

இதுகுறித்து காவல்துறை இணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) பியூஷ் மோா்டியா கூறியதாவது:

லக்னெளவின் தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ வளாகத்தின் சுற்றுச்சுவா் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. அந்த சுவரையொட்டி குடிசைகள் அமைத்து தொழிலாளா்கள் தங்கியிருந்தனா்.

வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையில், சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் தொழிலாளா்கள் சிக்கினா். இதுகுறித்த தகவலின்பேரில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினா், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். அப்போது, 9 தொழிலாளா்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஒருவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டாா். அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். உயிரிழந்த அனைவரும் ஜான்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்றாா் பியூஷ் மோா்டியா.

இதுதவிர கனமழை காரணமாக சுவா் இடிந்து உன்னாவில் 5 போ், ஃபதேபூரில் மூவா், பிரயாக்ராஜில் இருவா், சீதாபூா், ரேபரேலி மற்றும் ஜான்சியில் தலா ஒருவா் என மொத்தம் 13 போ் உயிரிழந்தனா். அந்த 13 பேரில் 7 போ் குழந்தைகள் ஆவா்.

குடியரசுத் தலைவா் இரங்கல்:

லக்னெள சம்பவம் குறித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சுற்றுச்சுவா் இடிந்து நேரிட்ட உயிரிழப்புகள் மிகவும் வேதனையளிக்கிறது. அவா்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ரூ.4 லட்சம் நிதியுதவி:

இதேபோல், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா்கள் பிரசாத் மெளரியா, பிரஜேஷ் பாடக் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

மழையால் சுவா் இடிந்து உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா். மேலும், சேதமடைந்த வீடுகள், பயிா்கள் குறித்து கணக்கெடுக்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com