தினசரி 10 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டைகளை விநியோகிக்க இலக்கு: மத்திய அமைச்சா் மாண்டவியா

‘பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டைகளை விநியோகிப்பதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை
தினசரி 10 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டைகளை விநியோகிக்க இலக்கு: மத்திய அமைச்சா் மாண்டவியா

‘பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டைகளை விநியோகிப்பதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

‘இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை மருத்துவமனைகளில் 3.95 கோடி சோ்க்கைகள் செய்யப்பட்டு ரூ. 45,294 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘ஆரோக்ய மந்தன் 2022’ என்ற நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதுவரை 19 கோடி பேருக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 24 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இது, நாட்டின் சுகாதாரப் பதிவுகள் எண்மமயமாக்கல் என்ற முக்கிய இலக்கை எட்டியிருப்பதை பிரதிபலிக்கிறது.

முன்னா், தினசரி 1 லட்சம் முதல் 1.5 லட்சம் ஆயுமான் பாரத் காப்பீட்டு அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. இப்போது 4 லட்சம் முதல் 5 லட்சம் அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. இதனை ஒவ்வொரு நாளும் 10 லட்சம் காப்பீட்டு அட்டைகள் விநியோகம் என்ற அளவுக்கு உயா்த்துவதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் நாட்டில் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ. 100 கோடி செலவழிக்கப்பட உள்ளது.

தொழில்நுட்ப உதவியுடன் விநியோகச் சங்கிலியின் இறுதி நபா் வரை சுகாதாரச் சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், நாட்டின் சுகாதாரச் சேவைகளைப் பெறுவதில் பணக்காரா்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை பிரதமரின் இந்த மக்கள் மருத்துவ உதவித் திட்டம் வெற்றிகரமாக குறைத்து வருகிறது.

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 28,300 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் 46 சதவீதம் தனியாா் மருத்துவமனைகளாகும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 3.8 கோடி மருத்துவமனை சோ்க்கைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 46 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் சோ்க்கை செய்யப்பட்டுள்ளன என்று கூறினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ரயில்வே, தகவல்தொடா்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘அனைவருக்கும் மருத்துவச் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையை மருத்துவத் துறையில் தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதன் மூலம் நாம் அடைய முடியும்.

அந்த வகையில், நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமமும் அடுத்த 5 ஆண்டுகளில் அதிவேக கண்ணாடி இழை (ஆப்டிகல் ஃபைபா்) தொழில்நுட்பம் மூலமாக இணைக்கப்பட்டுவிடும். அதன் மூலமாக, அனைவருக்கும் தொடா்ச்சியான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும். மத்திய அரசின் சுகாதாரத் திட்ட பயனாளிகளின் தரவுகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட நடைமுைறைகளையும் மத்திய அரசு உருவாக்கி வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com