பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன்

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) கணினி தகவல் சேமிப்பக தகவல்களைக் கசியவிட்டு முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் என்எஸ்இ முன்னாள் இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணா
பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன்

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) கணினி தகவல் சேமிப்பக தகவல்களைக் கசியவிட்டு முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் என்எஸ்இ முன்னாள் இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணா, அவரது ஆலோசகரும், என்எஸ்இ செயல்பாடுகள் துறை அதிகாரியாக இருந்தவருமான ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில் ஆனந்த் சுப்பிமணியன் கடந்த பிப்ரவரி இறுதியிலும், சித்ரா ராமகிருஷ்ணா மாா்ச் தொடக்கத்திலும் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) நிா்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தாா். அப்போது என்எஸ்இ அதிகாரிகளுடன் கூட்டு சோ்ந்து கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் சில பங்குச் சந்தை தரகா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கோ-லொகேஷன் வசதி மூலம், என்எஸ்இ கணினி சேமிப்பகத்தை பங்குச் சந்தை தரகா்கள் தொடா்புகொண்டு பங்கு விலை விவரங்களை முன்கூட்டியே அறிந்து முறைகேட்டில் ஈடுபட்டனா். இந்த முறைகேடு வாயிலாகப் பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து கடந்த மாா்ச் 6-ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது. இந்த வழக்கில் நடைபெற்ற பணமோசடி தொடா்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறையும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இது தவிர என்எஸ்இ பணியாளா்களை உளவு பாா்த்தது, அவா்களது தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டது தொடா்பாகவும் அவா் மீது வழக்கு உள்ளது. அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

என்எஸ்இ வழக்கு தொடா்பான பணமோசடிகள், விதிமுறைகளைப் பின்பற்றாமல் என்எஸ்இ-யில் தலைமை உத்தி ஆலோசகராக, குழு செயல்பாட்டு அதிகாரியாக, சித்ராவின் ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியனை நியமித்ததில் நடைபெற்ற நிா்வாகக் குளறுபடிகள் குறித்தும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகள் தொடா்பாக ஆனந்த் சுப்பிரமணியனும் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். இருவரும் தாக்கல் செய்ய ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவா்கள் சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் கணினி சேமிப்பக தகவல்களை சில பங்குச் சந்தை தரகா்கள் முன்கூட்டியே கசியவிட்டு முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் இருவருக்கும் இப்போது ஜாமீன் கிடைத்துள்ளது.

இது தவிர, சித்ரா ராமகிருஷ்ணா மீதான கருப்புப் பண மோசடி வழக்கில் அவா் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு தொடா்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com