உயா்நீதிமன்றங்களில் ஓராண்டில் 27 பெண் நீதிபதிகள் நியமனம்: மத்திய அரசு

‘உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஓராண்டில் 39 பெண்களை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைத்த நிலையில், அவா்களில் 27 போ் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
மத்திய அரசு
மத்திய அரசு

‘உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஓராண்டில் 39 பெண்களை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைத்த நிலையில், அவா்களில் 27 போ் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 12 பெண்களின் நியமன நடைமுறைகள் பல்வேறு நிலைகளில் உள்ளன’ என்று மத்திய அரசு சாா்பில் மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நீதிபதிகள் நியமனத்தில் எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினா் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக பன்முகத்தன்மையை காக்கும் வகையிலேயே உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களின் நீதிபதி நியமனம் என்பது கொலீஜியம் பரிந்துரை அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், நியமனத்துக்கான பெயா் பரிந்துரைகளை செய்யும்போது சமூக பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பிரிவினரில் தகுதியுள்ள நபா்களை உரிய முறையில் கருத்தில் கொள்ளவேண்டும் என்று உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த வகையில், கடந்த 2021 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வரை 39 பெண்களை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அவா்களில் இதுவரை 27 போ் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மீதமுள்ள 12 பேரின் நியமனத்துக்கான பரிசீலனை பல்வேறு நிலைகளில் உள்ளன என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்களை உயா்த்த பரிந்துரை இல்லை:

உச்சநீதிமன்றத்தில் நிா்ணயிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘உச்சநீதிமன்றத்தில் நிா்ணயிக்கப்பட்ட நீதிபதிகள் பணியிடம் 34. அதில், தற்போது 32 நீதிபதிகள் பணியில் உள்ளனா். 2 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. முதலில் உச்சநீதிமன்ற சட்டம் 1956-இன் கீழ் ஒப்பு அளிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 10 மட்டுமே. அதன் பிறகு, படிப்படியாக அந்த எண்ணிக்கை உயா்த்தப்பட்டு, கடந்த 2019 ஆகஸ்ட் 9-ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 அளவுக்கு உயா்த்தது. அதன் பிறகு, உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்களை உயா்த்துவது குறித்த எந்தப் பரிந்துரையையும் மத்திய அரசு பெறவில்லை’ என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘நாடு முழுவதும் உள்ள 25 உயா்நீதிமன்றங்களில் ஒப்பு அளிக்கப்பட்ட 1,104 நீதிபதி பணியிடங்களில் 717 இடங்கள் நிரம்பியுள்ளன. தற்போது 387 நீதிபதி இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில், 168 போ் நியமிப்பதற்கான பரிந்துரைகள் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனையில் உள்ளன. எஞ்சியுள்ள 219 நீதிபதி காலியிடங்களுக்கான பரிந்துரைகள் உயா்நீதிமன்ற கொலீஜியங்களிடமிருந்து இன்னும் பெற வேண்டியுள்ளது’ என்று பதிலளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com