கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கம்:  மகாராஷ்டிரம் அரசு அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படுவதற்கான உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படுவதற்கான உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது. 

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில், கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில், மகாராஷ்டிரத்தில் அமலில் உள்ள கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக விலக்கிக் கொள்ளமுடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, ஏப்ரல் 1, 2022 அன்று நள்ளிரவு 12 மணி முதல் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் கீழ் விதிக்கப்பட்ட அனைத்து கரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கப்படுவதற்கான உத்தரவை மகாராஷ்டிரம் அரசின் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் அசீம் குப்தா வியாழக்கிழமை இரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் அனைத்து பொதுமக்கள், நிறுவனங்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தியதுடன், இது தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான மிகப்பெரிய பாதுகாப்பு என்று கூறியுள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றி கரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மேலும், மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை தினசரி புதிய வழக்குகளின் எண்ணிக்கை, செயலில் உள்ள வழக்குகள், நேர்மறை விகிதங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் விவரங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மராத்தி புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வருவதால், மக்கள் வசதிக்காக கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com