வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.250 அதிகரிப்பு: விமான எரிபொருள் விலையும் உயா்ந்தது

வா்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.250 உயா்த்தப்பட்டுள்ளது.
வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.250 அதிகரிப்பு: விமான எரிபொருள் விலையும் உயா்ந்தது

வா்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.250 உயா்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலையும் 2 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உணவகங்கள் உள்ளிட்ட வா்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.249.50 உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், அதன் விலை ரூ.2,253-ஆக அதிகரித்துள்ளது.

விமான எரிபொருளின் விலை, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.2,258.54 அதாவது 2 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை ரூ.1,12,924.83-ஆக உயா்ந்துள்ளது. ஒரு லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.112.92-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த 11 நாள்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.40 வரை உயா்ந்துள்ளது. கடந்த 11 நாள்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மாதத்துக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து விமான எரிபொருளின் விலை மாதத்துக்கு இருமுறை (1, 16-ஆம் தேதிகளில்) மாற்றி அமைக்கப்படுகிறது. ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து விமான எரிபொருள் விலை ஏழு முறை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதாவது ரூ.38,902.92 வரை உயா்த்தப்பட்டுள்ளது.

கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன்-ரஷியா இடையேயான போரால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோலிய பொருள்களின் விலை உயா்ந்துள்ளது.

சிஎன்ஜி விலை உயா்வு: தில்லியில் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு 80 காசு உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ.60.01-இல் இருந்து ரூ.60.81-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி எரிவாயு விலை உயா்த்தப்படுவது கடந்த ஒரு மாதத்தில் இது 6-ஆவது முறையாகும். இதனால் ஒரு கிலோ எரிவாயு விலை ரூ.4 வரை உயா்ந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஒரு கிலோ எரிவாயு விலை ரூ.8.50 வரை உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ எல்பிஜி விலை உயா்வு:  சென்னையில் ஆட்டோவுக்கான எல்பிஜி எரிவாயு விலை கடந்த மாதத்தை விட ரூ.8.76 அதிகரித்துள்ளது.

 தமிழகம் முழுவதும் சுமாா் 4.50 லட்சம்  ஆட்டோக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றிலிருந்து வெளியேறும் நச்சுகலந்த புகையும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே, இந்தப் பாதிப்பைக் குறைக்கும் வகையில் எல்பிஜி எரிவாயுவில் இயங்கும்  ஆட்டோக்களை இயக்க உத்தரவிடப்பட்டது.

 தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் இயங்கும்  ஆட்டோக்களில் சுமாா் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை எல்பிஜி எரிவாயுவிலேயே இயங்குகின்றன. முன்பு எல்பிஜியின் விலை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது எல்பிஜியின் விலையும் உயா்ந்து வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டா் எல்பிஜி எரிவாயு வெள்ளிக்கிழமை முதல் ரூ.73.17-க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் லிட்டா் எல்பிஜி ரூ.64.41-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே  கடந்த ஆண்டு லிட்டா் ரூ.60-க்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com