பஞ்சாப் கொடுத்த நம்பிக்கை: அசாம், திரிபுராவில் கவனம் செலுத்தும் ஆம் ஆத்மி!

பஞ்சாப் தேர்தல் கொடுத்த நம்பிக்கையில் அசாம் மற்றும் திரிபுரா மாநிலத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கவனம் செலுத்த இருக்கிறது.
பஞ்சாப் கொடுத்த நம்பிக்கை: அசாம், திரிபுராவில் கவனம் செலுத்தும் ஆம் ஆத்மி!

பஞ்சாப் தேர்தல் கொடுத்த நம்பிக்கையில் அசாம் மற்றும் திரிபுரா மாநிலத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கவனம் செலுத்த இருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. 

இந்நிலையில், பஞ்சாப் வெற்றி கொடுத்த நம்பிக்கையில் அசாம் மற்றும் திரிபுராவில் ஆம் ஆத்மி கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக, அசாம் மாநிலம் குவஹாட்டியில் விரைவில் நடைபெற உள்ள 60 இடங்களைக் கொண்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தினுசுகியா மற்றும் லக்கிம்பூர் ஆகிய 2 வார்டுகளில் வென்று தன் கணக்கைத் தொடங்கியது.

2012 ஆம் ஆண்டு முதலே அசாமில் செயல்பட்டு வந்தாலும் கட்சியின் நிலை மோசமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், பஞ்சாப் தேர்தல் கொடுத்த வெற்றி பாஜக ஆளும் மாநிலத்திலேயே ஆம் ஆத்மியின் செயல்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அசாம் மாநில ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பாபென் சௌத்ரி ‘சமீப காலங்களில் ஆம் ஆத்மி கட்சியில் பலர் இணைந்துள்ளனர். இந்த முறை குவஹாட்டியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இருக்கிறோம். இதற்காக, போட்டியிட இதுவரை 159 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணபதாரர்களின் விவரங்களைச்  சேகரிக்கும் தன்னார்வலர்களின் கருத்துக்களின் அடிப்படையில் போட்டியாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அசாமின் அனைத்து மாவட்டங்களிலும் ஆம் ஆத்மிக்கு கிளைகள் உள்ளன. மேற்கொண்டு திரிபுரா மாநிலத்திலும் தீவிரமாக செயல்பட கட்சியின் மத்திய தலைமைக்கு கூறியுள்ளாதாக தெரிவித்துடன் ‘எங்கள் செயல்பாடுகளை மத்திய தலைவர்கள் கவனிக்கிறார்கள். ஆம் ஆத்மி மீதான மக்களின் ஆர்வத்தை அடிமட்ட அளவில் பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் வடகிழக்கில் எங்கு பணியாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வோம். அடுத்ததாக திரிபுராவில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் தலைமைக்குப் பரிந்துரைத்துள்ளேன்’ என்றார்.

அசாம் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியதிலிருந்து இருந்து இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்கள் (2016 மற்றும் 2021)  நடந்தாலும் எதிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.

மேலும், பாபென் சௌத்ரி ’அசாம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோம். நாங்கள் சட்டப்பேரவை போன்ற தேர்தல்களில் போட்டியிடுவதற்கு முன்பு சிறிய தேர்தல்களில் போட்டியிடுவது வழக்கமானது தான்’ என்றார்.

இருப்பினும், தற்போது திரிபுராவில் ஆம் ஆத்மி கட்சி கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டதும் வடகிழக்கில் உள்ள மற்ற மாநிலங்களிலும் அதற்கு எந்த அடித்தளமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com