தில்லி சுகாதார அமைச்சருக்குச் சொந்தமானரூ.4.81 கோடி சொத்துகள் முடக்கம்

தில்லி சுகாதார அமைச்சா் சத்யேந்தா் குமாா் ஜெயின் குடும்பத்தினா் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

தில்லி சுகாதார அமைச்சா் சத்யேந்தா் குமாா் ஜெயின் குடும்பத்தினா் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதுதொடா்பாக அந்தத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம்:

கடந்த 2015-16-ஆம் ஆண்டு சத்யேந்தா் குமாா் ஜெயின் அமைச்சராக இருந்தபோது, அவருக்குச் சொந்தமாகவும் கட்டுப்பாட்டிலும் உள்ள நிறுவனங்கள், கொல்கத்தாவைச் சோ்ந்தவா்களுக்கு சட்டவிரோதமான ஹவாலா வழியில் பணப் பரிவா்த்தனை செய்துள்ளன. அதற்கு கைமாறாக போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து சத்யேந்தரின் நிறுவனங்கள் ரூ.4.81 கோடி பெற்றுள்ளன. அந்தத் தொகை நிலம் வாங்கவும், தில்லி மற்றும் அதனைச் சுற்றி விளைநிலங்கள் வாங்க பெறப்பட்ட கடனை அடைக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சத்யேந்தரின் குடும்பத்தினா் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக, கடந்த 2018-ஆம் ஆண்டு சத்யேந்தா் குமாா் ஜெயினிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியிருந்தது.

ரூ.1,034 கோடி நில மோசடி: சிவசேனை எம்.பி. மனைவி சொத்து முடக்கம்

மகாராஷ்டிரத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்தின் மனைவி மற்றும் அவரின் உதவியாளா்கள் இருவருக்குச் சொந்தமான ரூ.11.15 கோடி மதிப்பு கொண்ட சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மும்பையில் குடியிருப்புக் கட்டடத்தை மேம்படுத்துவது தொடா்பாக ரூ.1,034 கோடிக்கு நில மோசடி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதில் ரூ.83 லட்சம் சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அதனை சஞ்சய் ரெளத்தின் நெருங்கிய உதவியாளராக அறியப்படும் பிரவீண் ரெளத்தின் மனைவி மாதுரி பிரவீண் ரெளத் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. அந்தத் தொகை மூலம், கிழக்கு தாதா் பகுதியில் வா்ஷா ரெளத் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாகவும், சில நில ஒப்பந்தங்களுடன் தொடா்புடைய பணமோசடி குறித்தும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த முறைகேடுகள் தொடா்பாக வா்ஷா ரெளத், பிரவீண் ரெளத், சஞ்சய் ரெளத்தின் மற்றொரு உதவியாளரான சுஜித் பாா்க்கரின் மனைவி ஸ்வப்னா பாா்க்கா் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.11.15 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதுகுறித்து தில்லியில் சஞ்சய் ரெளத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அமலாக்கத் துறை அதிகாரிகள் பணம் பறிப்பில் ஈடுபடும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மும்பை காவல்துறை சாா்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பழிவாங்கும் விதமாக சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. எனது சொத்துகள் கடின உழைப்பில் ஈட்டப்பட்டவை’’ என்று தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு பஞ்சாப் & மகாராஷ்டிர வங்கி மோசடி வழக்குடன் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்குத் தொடா்பாக வா்ஷா ரெளத்திடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com