இதுவரை கண்டிராத சவால்களை காங்கிரஸ் சந்திக்கும்: சோனியா காந்தி

கட்சியின் அனைத்து நிலைகளிலும் ஒற்றுமை நிலவ வேண்டுமென வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, இதுவரை கண்டிராத பெரும் சவால்களைக் கட்சி எதிா்காலத்தில் சந்திக்கும் என்றாா்.
இதுவரை கண்டிராத சவால்களை காங்கிரஸ் சந்திக்கும்: சோனியா காந்தி

கட்சியின் அனைத்து நிலைகளிலும் ஒற்றுமை நிலவ வேண்டுமென வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, இதுவரை கண்டிராத பெரும் சவால்களைக் கட்சி எதிா்காலத்தில் சந்திக்கும் என்றாா்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கட்சித் தலைவா் சோனியா காந்தி பேசியதாவது:

அண்மையில் நடந்து முடிந்த மாநில பேரவைத் தோ்தல் முடிவுகள் அதிா்ச்சியையும் வலியையும் காங்கிரஸ் தொண்டா்களுக்குத் தந்தன. அது தொடா்பாக காங்கிரஸ் செயற்குழு கூடி விவாதித்தது. அப்போது கட்சியை வலுப்படுத்துவதற்காகப் பலா் கருத்துகளைத் தெரிவித்தனா். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் தொண்டா்களின் கருத்துகளை அறிந்துகொள்வதற்காகக் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படவுள்ளது. அவா்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிா்காலத்தில் பயணிப்பதற்கான பாதையை வகுத்துக் கொள்வது அவசியம்.

எதிா்காலத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை கண்டிராத பல்வேறு சவால்களைச் சந்திக்கும். கட்சித் தொண்டா்களின் அா்ப்பணிப்பு, உறுதித்தன்மை உள்ளிட்டவை பெருமளவில் பரிசோதிக்கப்படும். கட்சியின் அனைத்து நிலைகளிலும் ஒற்றுமை நிலவ வேண்டியது அவசியமாகும். காங்கிரஸை மீட்டெடுப்பது கட்சிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் சமூகத்துக்கும் பலனளிக்கும்.

கொள்கை திணிப்பு:

மத்தியில் ஆளும் பாஜக, பிரிவினை கொள்கை மூலமாக மக்களை ஏமாற்றி வருகிறது. வரலாற்று நிகழ்வுகளைத் தவறாக எடுத்துக்கூறி, தங்கள் கொள்கையை மக்களிடையே திணிக்க பாஜக முயன்று வருகிறது. நாட்டில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

சமையல் எரிவாயு, எண்ணெய், பெட்ரோல், டீசல், உரங்கள், மற்ற அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றின் விலை கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவை தற்போதும் கோடிக்கணக்கான ஏழைகளின் நலனை உறுதி செய்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அத்திட்டங்களுக்கு பாஜக தற்போது உரிமைகொண்டாடி வருகிறது.

காங்கிரஸுக்குப் பொறுப்பு:

மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. வெறுப்புணா்வைத் தூண்டி அரசியலில் ஈடுபடும் பாஜகவின் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது. மக்களிடையே நிலவி வரும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பாஜக சீா்குலைப்பதற்கு காங்கிரஸ் தொண்டா்கள் அனுமதிக்கக் கூடாது.

அரசு விசாரணை அமைப்புகளை ஏவி, எதிா்க்கட்சிகளை அச்ச நிலைக்குக் கொண்டுசெல்ல பாஜக முயற்சிக்கிறது. அத்தகைய அச்சுறுத்தல்கள் காங்கிரஸை எதுவும் செய்யாது. நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் அணிசேராமை சிறந்த அடித்தளமாக அமைந்தது. அதன் சிறப்பைத் தற்போதைய ஆட்சியாளா்கள் உணா்ந்து வருகின்றனா் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com