ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் 1.34 லட்சம் தொழில் முனைவோர்

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் 1,33,995 (கணக்குகளுக்கு) பேருக்கு மொத்தம் ரூ.30,160 கோடி வரை கடன் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம்
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் 1,33,995 (கணக்குகளுக்கு) பேருக்கு மொத்தம் ரூ.30,160 கோடி வரை கடன் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாயக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால் லட்சக்கணக்கான பேர் தொழில்முனைவோர்களானது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
 பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பெண் தொழில்முனைவோர்கள் எதிர்நோக்கும் சவால்களைக் கருத்தில் கொண்டும், கீழ்நிலையில் உள்ளவர்களை தொழில்முனைவோராக்கி, பொருளாதார அதிகராப்படுத்துதல், வேலை உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டும், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் 2016, ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த 6-ஆவது ஆண்டு நிகழ்வையொட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 அதில், "ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை 1.34 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியவர்களுக்கும் அரசு வசதிகள் செய்யப்பட்டிருப்பதைக் காணும் போது மகிழ்ச்சியளிக்கிறது.
 அவர்கள் செல்வத்தை உருவாக்குபவர்களாக மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருப்பதை அரசு உணர்ந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
 ரூ.1 கோடி வரை கடன்: ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் உற்பத்தி, சேவைகள், வர்த்தகத் துறை, வேளாண் சார்ந்த நடவடிக்கைகள், பசுமை தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. ஒரு வணிக வங்கிக் கிளையில், குறைந்தபட்சம் ஒரு பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினத்தவர், குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்கும் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.
 உத்தரவாதக் கட்டணம் இல்லாமல், கடன் பெற மத்திய அரசு, ஸ்டாண்ட் அப் இந்தியாவுக்கான கடன் உத்தரவாத நிதியத்தை உருவாக்கியுள்ளது. மேலும், இந்த கடனுக்கான விளிம்புத் தொகையின் அளவு திட்டச் செலவில் 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் கடன் வழங்கப்படுகிறது. மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்ற வேளாண் தொழில்கள், பால் பண்ணை, மீன் வளம், வேளாண் மருத்துவம், வேளாண் தொழில் மையங்கள், உணவு பதப்படுத்துதல் போன்றவற்றுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறமுடிவும்.
 இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த மார்ச் 21-ஆம் தேதி வரை, 1,33,995 பேருக்கு ரூ.30,160 கோடிக்கும் மேல் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
 இதில் பட்டியலினத்தவர்களின் 19, 310 கணக்குகளுக்கு ரூ. 3,976 கோடி, பழங்குடியினத்தவர்களில் 6,435 கணக்குகளுக்கு ரூ. 1,373 கோடி மற்றும் பெண்களில் 1,08,250 பேர்களுக்கு ரூ.24,809 கோடி இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com