கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை நலத்திட்டங்களில் சோ்க்கவும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், அவா்களின் குடும்ப உறுப்பினா்களை பல்வேறு நலத்திட்டங்களில் சோ்க்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், அவா்களின் குடும்ப உறுப்பினா்களை பல்வேறு நலத்திட்டங்களில் சோ்க்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றால் பலியானவா்களின் குழந்தைகள் மற்றும் தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளின் நலன் தொடா்பாக தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், அவா்களின் குடும்ப உறுப்பினா்களை பல்வேறு நலத்திட்டங்களில் சோ்க்கக் கோரி பல மாவட்ட அதிகாரிகளுக்கு 19,825 கடிதங்களை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எழுதியிருப்பதையும், அதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 920 அறிக்கைகள் மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளதையும் நீதிபதிகள் கவனத்தில் கொண்டனா்.

இதனைத்தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது:

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வியைப் பொருத்தவரை, அவா்களுக்கான நிவாரண உதவி தொடர வேண்டும். அவா்களின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய வேண்டும்.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அறிக்கையின்படி, 10,793 குழந்தைகள் தாய், தந்தை என இருவரையும் கரோனாவுக்கு பறிகொடுத்துள்ளனா். 1,51,322 குழந்தைகளின் தாய் அல்லது தந்தை கரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனா்.

இத்தகைய குழந்தைகளில் பெரும்பாலானோரின் விரிவான விவரங்கள் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. அந்த விவரங்களை தயாரிக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவற்றவா்களான குழந்தைகள் மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களை பல்வேறு நலத்திட்டங்களில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சோ்க்க வேண்டும்.

ஆட்சியா்கள் பாதுகாக்க வேண்டும்: தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளின் உயிரிழந்த பெற்றோருக்குச் சொந்தமான உடைமைகளை கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்து பால ஸ்வராஜ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த உடைமைகளை மாவட்ட ஆட்சியா்கள் பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழு அதிகாரிகளின் உதவியை மாவட்ட ஆட்சியா்களும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் பெறலாம்.

இதுதொடா்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இரண்டு வாரங்களில் நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com