சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்திற்கு மின்சாரம்!

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளான நிலையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்திற்கு முதல்முறையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்முறையாக மின்சார விளக்கு ஒளியில் படிக்கும் மாணவர்கள்(படம்: டிவிட்டர்)
முதல்முறையாக மின்சார விளக்கு ஒளியில் படிக்கும் மாணவர்கள்(படம்: டிவிட்டர்)

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளான நிலையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்திற்கு முதல்முறையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சடால் என்ற கிராமத்திற்கு, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டதில்லை.

மின் இணைப்பு கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் மின்சாரம் வழங்கப்படாததால், இருட்டை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஏற்றுக் கொண்டு கிராம மக்கள் வாழ்ந்து வந்தனர். இரவு நேரங்களில், மெழுகுவர்த்தி மற்றும் எண்ணெய் விளக்குகளையே வெளிசத்திற்கு இதுவரை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் உள்ளாட்சிகளுக்கான மானிய திட்டத்தின் கீழ், சடால் கிராமத்திற்கு முதல்முறையாக புதன்கிழமை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் இனி பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளதாக தெரிவித்த கிராம மக்கள், மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீர் அரசு, உள்ளாட்சி அமைப்பு மற்றும் மின்வாரியத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த பியார் சிங் என்ற எட்டாம் வகுப்பு மாணவர் கூறியதாவது:

“மின்சாரம் கிடைத்துள்ளதால் இனி எந்தப் பிரச்னையும் இன்றி படிக்க முடியும். முன்னதாக, இரவு நேரங்களில் விளக்கு ஒளியில் படிக்கும்போது விரைவில் சோர்வடைந்து விடுவோம்” என்றார்.

பத்ரிநாத்(72 வயது) என்ற முதியவர் கூறியதாவது:

“முந்தைய தலைமுறையினரால் மின்சாரத்தின் அதிசயத்தை நேரில் பார்க்க முடியவில்லை. இவ்வளவு நீண்ட காத்திருப்புக்கு பிறகு எங்களுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்றார்.

மின் மேம்பாட்டுத்துறையின் திட்ட பொறியாளர் ஜாதேவ் ஹுசைன் அக்தர் கூறுகையில்,

“மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, ரூ. 10.28 லட்சம் செலவில் சடால் கிராம மக்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த கிராமத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்” என்றார்.

நாடு சுதந்திரமடைத்து 75 ஆண்டுகளான பிறகு, இருட்டிலிருந்து ஒரு கிராமத்திற்கு சுதந்திரம் கிடைத்த வரலாற்று சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com