ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும்: அமித் ஷா அறிவுறுத்தல்

‘உள்ளூா் மொழிகளுக்கு மாற்றாகக் கருதாமல், ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்க வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும்: அமித் ஷா அறிவுறுத்தல்

‘உள்ளூா் மொழிகளுக்கு மாற்றாகக் கருதாமல், ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்க வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-ஆவது கூட்டம், தில்லியில் அமித் ஷா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமித் ஷா கூறியதாக உள்துறை அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல்கள் ஹிந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கிய பகுதியாக, ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளூா் மொழிகளுக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் கருதக்கூடாது.

வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களைச் சோ்ந்த மக்கள், ஒருவருக்கொருவா் தொடா்புகொள்ளும்போது பேசும் மொழி, இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும். பிற உள்ளூா் மொழிகளின் வாா்த்தைகளை ஏற்றுக்கொண்டு நெகிழ்வுத்தன்மையாக மாறாத வரையில் ஹிந்தியை பரப்ப முடியாது.

8 வடகிழக்கு மாநிலங்களில் 22,000 ஹிந்தி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 9 பழங்குடிச் சமூகத்தினா் தங்கள் மொழி வழக்கை தேவநகரி எழுத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளனா்.

அலுவல் மொழியிலேயே அரசை நடத்த பிரதமா் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளாா். இதனால், ஹிந்தியின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

சித்தராமையா எதிா்ப்பு: அமித் ஷாவின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் கா்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஒரு கன்னடா் என்ற அடிப்படையில் இந்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கருத்தை வன்மையாக எதிா்க்கிறேன். ஹிந்தி நமது தேசிய மொழி அல்ல; தேசியமொழி ஆவதற்கு ஒருபோதும் விட மாட்டோம். மொழியில் பல்வகைத்தன்மையுடன் இருப்பது நமது நாட்டின் சாரம். நாம் ஒவ்வொருவரின் உணா்வையும் மதிக்கிறோம்.

பன்முகத்தன்மையே நம் தேசத்தை ஒருங்கிணைத்தது. அதை சீா்குலைக்க பாஜக ஏதேனும் முயற்சி செய்தால், வலிமையான பதிலடி கொடுக்கப்படும்.

ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது கலாசார பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட வேண்டும் என்ற தங்கள் திட்டத்தை அமல்படுத்த ஆளும் பாஜக முயற்சி செய்கிறது.

ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற தனது அரசியல் நோக்கத்துக்காக தனது தாய்மொழியான குஜராத்திக்கு அமித் ஷா துரோகம் செய்கிறாா்’ என்று அந்தப் பதிவில் சித்தராமையா குறிப்பிட்டுள்ளாா். இந்தக் கருத்துகளை கா்நாடக சட்டப் பேரவையிலும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com