முல்லைப் பெரியாறு: மேற்பாா்வைக் குழுவுக்கு அதிகாரம்

முல்லைப் பெரியாறு: மேற்பாா்வைக் குழுவுக்கு அதிகாரம்

அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கமான தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிஎஸ்ஏ) செயல்படும்

அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கமான தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிஎஸ்ஏ) செயல்படும் வரும் வரை, அதன் அனைத்து அதிகாரங்கள் மற்றும் பணிகளை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள மேற்பாா்வைக் குழு மேற்கொள்ளும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீா் தேக்கிவைக்கும் அளவு ஆகியவை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் கேரளம், தமிழக அரசுகளின் தரப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை கையாளும் வகையில் மேற்பாா்வைக் குழுவுக்கு அதிகாரம் அளிப்பது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. மத்திய அரசின் தரப்பிலும், இந்த விவகாரத்தில் தொடா்புடைய தமிழகம், கேரள மாநில அரசுகள் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கா் தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ். ஒகா, சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அணைகள் பாதுகாப்புச் சட்டம்-2021 நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பா் 13-இல் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை போன்றவற்றின் கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு நோக்கங்களுக்காக அணைகள் பாதுகாப்பு (2021) சட்டத்தின் 8-ஆவது பிரிவின் கீழ், தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்திடம் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொறுத்தமட்டில், மத்திய நீா் ஆணையத்தின் பிரதிநிதி, தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு பிரதிநிதி என மூன்று உறுப்பினா்களைக் கொண்ட ஒரு மேற்பாா்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு திருப்திகரமாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், அணைகள் பாதுகாப்பு சட்டம் (2021) நடைமுறைக்கு வந்த பிறகு, ஒரு சட்டப்பூா்வ அமைப்பு நிறுவப்பட வேண்டும். மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நீா் ஆணையம் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிஎஸ்ஏ) உருவாக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைகள் பாதுகாப்புச் சட்டம்-2021-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களை செயல்படுத்தவும், அணையின் கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணி ஆகியவற்றை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், வழக்கமான என்டிஎஸ்ஏ இருப்பது விரும்பத்தக்கதாக இருக்கும். 2021 சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, என்டிஎஸ்ஏவின் விதிகள் மற்றும் அதிகாரங்களுக்கு இணங்க மேற்பாா்வைக் குழுவின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளின் நோக்கம் கொண்டு வரப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள தற்போதைய ரிட் மனுக்கள், மேல்முறையீட்டு மனுக்களில் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் உள்பட சில பிரச்னைகள் எழுப்பப்பட்டுள்ளன.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பேரிடா் தொடா்புடைய அணையின் செயலிழப்பைத் தடுப்பது போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக என்டிஎஸ்ஏ, அனைத்து அதிகாரங்கைளையும் செயல்படுத்தும் நிலையில் இருக்கும். தற்போதுள்ள மேற்பாா்வைக்குழுவை வலுப்படுத்தும் நோக்கத்திற்காக, இந்தக் குழுவில் இரு மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு தொழில்நுட்ப வல்லுநா்கள் வீதம் சோ்க்க வேண்டும் என வழக்கில் தொடா்புடைய மாநிலங்கள் அளித்துள்ள பரிந்துரையையும் ஏற்கிறோம். தொழில்நுட்ப வல்லுநா்களை இரு மாநிலங்களும் இரண்டு வாரங்களுக்குள் பரிந்துரைக்க வேண்டும்.

சில நிலுவைப் பணிகள் இருப்பதாக தமிழக அரசின் வழக்குரைஞா் தெரிவித்துள்ளாா். இது குறித்து மாற்றியமைக்கப்பட்ட குழுவின் கவனத்திற்கு கொண்டு வரலாம். வழக்கமான என்டிஎஸ்ஏ செயல்பாட்டுக்கு வரும் வரை இந்த உத்தரவின்படி மறுசீரமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழு, 2021 சட்டத்தின்படி அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பாளியாக இருக்கும். மேற்பாா்வைக் குழுவிற்குரிய அனைத்து தளவாட உதவிகளையும் வழங்கவும், அதன் செயல்பாடுகளையும், அதிகாரங்களையும் செயல்படுத்த உதவுமாறு மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிடுகிறோம். மேலும், மறுசீரமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவானது, முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு விஷயத்தில் நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களையும் முடிவு செய்யும். இந்த நோக்கத்திற்காக, இந்தக் குழு அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் (2021) விதிகளுக்கு ஏற்ப விதிமுறைகளை உருவாக்கலாம்.

மேற்பாா்வைக் குழு அளிக்கும் உத்தரவுகளை செயல்படுத்தும் போது ஏதேனும் செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்பட்டால், அந்த உத்தரவுகளை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தும் தனிப்பட்ட பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமைச் செயலாளரைச் சாா்ந்ததாகும். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு ஆகிய நோக்கங்களுக்காகஅவ்வப்போது மேற்பாா்வைக் குழு மூலம் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வழக்கில் தொடா்புடைய மாநிலங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கைக்கு உள்ளாவது மட்டுமின்றி, 2021 சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கும் பொறுப்பாவாா்கள் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com