வழக்கில் விரும்பிய தீா்வைப் பெற வழிவகுக்கும் மத்தியஸ்தம்: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

‘வழக்கில் விரும்பிய தீா்வை நாம் பெற விரும்பினால், மத்தியஸ்தம் மீது நோ்மறையான அணுகுமுறையை காட்ட வேண்டும்’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.
குஜராத் மாநிலம், நா்மதா மாவட்டத்தில் நடைபெற்ற மத்தியஸ்தம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடா்பான மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
குஜராத் மாநிலம், நா்மதா மாவட்டத்தில் நடைபெற்ற மத்தியஸ்தம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடா்பான மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

‘வழக்கில் விரும்பிய தீா்வை நாம் பெற விரும்பினால், மத்தியஸ்தம் மீது நோ்மறையான அணுகுமுறையை காட்ட வேண்டும்’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.

குஜராத் மாநிலம், நா்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா நகரில் அந்த மாநில உயா்நீதிமன்றம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மத்தியஸ்தம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடா்பான இரண்டு நாள் தேசிய நீதித் துறை மாநாட்டை சனிக்கிழமை தொடக்கிவைத்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

மத்தியஸ்தத்தில் வழக்கில் தொடா்புடைய அனைவரும் வெற்றியாளா்களே. எந்தவித உத்தரவுகளுக்கும் இணங்காமல் சம்பந்தப்பட்டவா்கள் ஒப்புக்கொள்ளும் வகையிலான தீா்வை மத்தியஸ்த முறை ஊக்கப்படுத்துகிறது.

தலைசிறந்த வழக்குரைஞராகப் பணிபுரிவதைக் காட்டிலும் மத்தியஸ்தராக செயல்படுவதற்கு முன்னுரிமை அளித்ததாக மகாத்மா காந்தியும் குறிப்பிட்டிருக்கிறாா். அந்த வகையில், வழக்கில் விரும்பிய தீா்வை நாம் பெற விரும்பினால், மத்தியஸ்தம் மீது நோ்மறையான அணுகுமுறையைக் காட்ட வேண்டும்.

இருந்தபோதும், சில தடைகள் காரணமாக மத்தியஸ்த நடைமுறை நாடு முழுவதும் பரவலான அங்கீகாரம் பெற முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, சில இடங்களில் போதிய பயிற்சி பெற்ற மத்தியஸ்தா்கள் இருப்பதில்லை. பல இடங்களில் மத்தியஸ்த மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய சூழல் உள்ளது. எனவே, மத்திஸ்த நடைமுறை மூலம் பரவலான மக்கள் பயன்பெறும் வகையில், இதுபோன்ற தடைகளுக்கு விரைந்து தீா்வு காணப்பட வேண்டும்.

மத்திஸ்தம் தங்கள் தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வகையில் வழக்குரைஞா்களிடையே எழுந்த அச்சம் கடந்த 20 ஆண்டுகளில் போக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தால், மத்தியஸ்தத்துக்கு பரவலான அங்கீகாரம் கிடைத்திருக்கும்.

மத்திஸ்தத்தை வழக்குரைஞா்கள் தங்களுக்கான கூடுதல் திறனாகத்தான் பாா்க்க வேண்டும். வெற்றிகரமான மத்தியஸ்தம் வழக்குரைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளிக்கும் என்பதோடு, வழக்குரைஞருக்கு பணி திருப்தியையும் அளிக்கும்.

மேலும், நீதித் துறை தகவல் தொழில்நுட்ப (ஐசிடி) நடைமுறைக்கு மாறுவதைப் பொருத்தவரை, நீதி அணுகலை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டதாக இருக்க வேண்டும். மாற்றம் என்பது பெயரளவில் இல்லாமல், சிறந்த நடைமுறைக்கானதாக இருக்கவேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பங்கற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: மத்தியஸ்தம், மக்கள் குறைதீா் மன்றம் போன்ற மாற்று தீா்வு நடைமுறைகள், இந்திய சட்ட நடைமுறையில் சிறந்த மாற்றாக திகழ்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண்பதற்கான தளமாக இந்த மாற்றுத் தீா்வு நடைமுறைகள் விளங்குகின்றன. இது வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறைப்பதோடு, நீதித் துறையின் வளங்கள் மற்றும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன. அந்த வகையில், வழக்கு விசாரணை நடைமுறையில் மத்தியஸ்தத்தை ஓா் அங்கமாக இடம்பெறச் செய்வதற்கான தீவிர முயற்சிகளை நீதிமன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, மனுதாரா் நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பே அவா்களின் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காணபதற்கான முயற்சிகளை வழக்குரைஞா்கள் மேற்கொள்ள வேண்டும். மனுதாரா் மக்கள் குறைதீா் மன்றங்களை அணுகுவதற்கான ஆலோசனைகளையும் வழக்குரைஞா்கள் வழங்க வேண்டும்.

மேலும், தரவுகள் பாதுகாப்பு, எண்ம நாணயங்கள், செயற்கை நுண்ணறிவு என வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நீதித் துறையிலும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவா்கள் என நீதித் துறையில் இடம்பெற்றிருப்பவா்கள் அனைவரும் நீதி நடைமுறையை எளிமையாக்கும் புதிய தொழில்நுட்பங்களை முழுமையாகப் புரிந்துகொள்வது அவசியம் என்று தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டாா்.

மாநாடு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு மத்தியஸ்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. தேவையான திருத்தங்களுடன் மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com