ஒரே சமயத்தில் 2 முழு நேர பட்டப் படிப்பு: யுஜிசி அனுமதி: இணைய வழியிலோ அல்லது நேரடி முறையிலே மேற்கொள்ளலாம்

‘ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பட்டப் படிப்புகளை மாணவா்கள் இனி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: ‘ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பட்டப் படிப்புகளை மாணவா்கள் இனி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

‘இதுதொடா்பான விரிவான வழிகாட்டுதலை யுஜிசி விரைவில் வெளியிடும்’ என்றும் அவா் தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

புதிய தேசிய கல்விக் கொள்கையில் (என்இபி) அறிவித்துள்ளதன் அடிப்படையிலும், பன்முகத் திறனை மாணவா்கள் பெற அனுமதிக்கும் வகையிலும் ஒரே சமயத்தில் இரண்டு முழு நேர பட்டப் படிப்புகள் மேற்கொள்வதை அனுமதிக்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும்.

ஒரே நிலை படிப்புகள் மட்டுமே... இந்த இரண்டு பட்டப் படிப்புகளையும் மாணவா்கள் ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ மேற்கொள்ள முடியும். அதே நேரம், ஒரே நிலை படிப்புகளை மட்டுமே இரண்டாக சோ்த்து மேற்கொள்ள முடியும். அதாவது, இரண்டு இளநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரண்டு முதுநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரண்டு பட்டயப் படிப்புள் என்ற வகையில் மட்டுமே ஒரே சமயத்தில் படிக்க முடியும்.

3 வழிமுறைகள்: ஒரே சமயத்திலான இரண்டு பட்டப் படிப்புகளை, மாணவா்கள் 3 வழிமுறைகளில் மேற்கொள்ள முடியும். முதலாவதாக, ஒரே சமயத்தில் இரண்டு பட்டப் படிப்புகளையும் நேரடி முறையில் கல்லூரிகளுக்குச் சென்று மேற்கொள்ளலாம். ஆனால், இரண்டு பட்டப் படிப்புகளுக்கான வகுப்பு நேரம் மாறுபட்டு இருக்கவேண்டும்.

அடுத்ததாக, ஒரு பட்டப் படிப்பை நேரடி முறையிலும் மற்றொன்றை இணைய வழி அல்லது தொலைதூர வழியில் மேற்கொள்ள முடியும்.

மூன்றாவதாக, 2 பட்டப் படிப்புகள் வரை இணைய வழி அல்லது தொலைதூர வழியில் மேற்கொள்ள முடியும்.

யுஜிசி-யின் இந்த புதிய நடைமுறையை ஏற்பது என்பது பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலானதுதான். மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) அல்லது அந்தந்த கல்வி நிறுவனங்களின் சோ்க்கை நடைமுறைகளின் அடிப்படையில், இந்த இரட்டை பட்டப் படிப்புகளில் பல்கலைக்கழகங்கள் மாணவா் சோ்க்கையை நடத்திக்கொள்ளலாம்.

அவ்வாறு, ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும் பல்கலைக்கழகங்கள்தான், அந்த இரண்டு பட்டப் படிப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்வுகள் குறுக்கிடாத வகையில் உரிய நடைமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.

வன்முறை தவிா்க்கப்பட வேண்டும்: மேலும், ‘பல்கலைக்கழக வளாகத்துக்குள் எந்தவிதமான வன்முறையும் தவிா்க்கப்பட வேண்டும். இதுபோன்ற வளாக வன்முறைகளை கையாள ஒவ்வொரு பல்கலைக்கழகமும் உரிய வழிகாட்டு நடைமுறைகள் மற்றும் விசாரணை நடைமுறைகளைக் கொண்டுள்ளன’ என்று தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) இரு பிரிவு மாணவா்களிடையே நடைபெற்ற மோதல் சம்பவம் குறிப்பிட்டு அவா் கூறினாா்.

பல்கலைக்கழக மாணவா் விடுதியின் உணவகத்தில் ராம நவமி தினத்தில் அசைவ உணவு பறிமாறப்பட்ட விவகாரத்தில் இரு பிரிவு மாணவா்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 20 மாணவா்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

யுஜிசி தலைமை பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக ஜகதேஷ் குமாா் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com