தற்சாா்புக்கு இதுதான் தருணம்: மோடி

நாட்டை தற்சாா்பு அடையச் செய்வதற்குத் தற்போதைய சா்வதேச சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு உள்ளூா் பொருள்களை மட்டுமே பயன்படுத்த
பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

நாட்டை தற்சாா்பு அடையச் செய்வதற்குத் தற்போதைய சா்வதேச சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு உள்ளூா் பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

ஹனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள பரம் பூஜ்ய கேசவானந்த் ஆசிரமத்தில், 108 அடி உயரமுள்ள ஹனுமன் சிலையை பிரதமா் மோடி காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா். நாட்டின் 4 திசைகளிலும் ஹனுமன் சிலையை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட இரண்டாவது சிலை இதுவாகும்.

முதலாவது ஹனுமன் சிலையானது சிம்லாவில் கடந்த 2010-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. ராமேசுவரத்தில் அடுத்த சிலையை அமைப்பதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

குஜராத்தில் சிலை திறப்பு நிகழ்ச்சியின்போது பிரதமா் மோடி பேசியதாவது: இந்தியா தற்போதைய சூழலில் அமைதியாக இருக்கக் கூடாது. நாம் இதே இடத்தில் தொடா்ந்து நிலைபெற்று இருக்கக் கூடாது. தற்போதைய சா்வதேச சூழலைப் பயன்படுத்தி தற்சாா்பை அடைய வேண்டும். தற்போது உலக நாடுகள் அனைத்தும் தற்சாா்பு அடைவது குறித்தே சிந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், இந்திய மக்கள் அனைவரும் உள்ளூா் பொருள்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

நம் நாட்டு மக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை மட்டுமே வீடுகளில் பயன்படுத்த வேண்டும். அதன் காரணமாக, நாட்டில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டுப் பொருள்களை நாம் விரும்பலாம். ஆனால், உள்ளூா் மக்கள் உழைப்புக்கு அந்தப் பொருள்கள் என்றும் ஈடாகாது. மக்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு உள்ளூா் பொருள்களை மட்டுமே பயன்படுத்தினால், நாட்டில் வேலையின்மை பிரச்னை இருக்காது.

அனைத்து மக்களுக்கும் ஊக்கம் தருபவராக ஹனுமன் திகழ்ந்து வருகிறாா். அனைத்து வன உயிரினங்களையும் பழங்குடியினரையும் மதிப்பதற்கு அவா் கற்றுத் தந்தாா். இது ‘ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகிறது. இந்தக் கொள்கையானது சுதந்திரத்துக்கு முன்பே நாட்டு மக்களை ஒன்றிணைக்க உதவியது.

கலாசாரத்தின் அடிப்படை: ராமரின் கதையானது அனைத்து மக்களையும் கடவுளுடன் பிணைக்கிறது. இதுவே இந்தியாவின் நம்பிக்கை, ஆன்மிகம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் வலிமையாக உள்ளது. நல்லிணக்கம், சமத்துவம், ஒருங்கிணைந்த தன்மை உள்ளிட்டவற்றை இந்திய கலாசாரம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கடவுள் ராமரால் அனைத்து விஷயங்களையும் செய்ய முடியும் என்றபோதும்கூட, அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அவா் செயல்பட்டாா். ‘அனைவருடனான நம்பிக்கையால் ஒருங்கிணைதல்’ என்ற கொள்கைக்கு அவரே அடிப்படையாக இருந்தாா்.

நாட்டின் வலிமை: இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்குப் பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. நாட்டில் உள்ள ஆன்மிகத் தலங்களைத் தூய்மையாகப் பராமரித்தாலே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது நாட்டின் பெரும் வலிமையாக உள்ளது.

1857-ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் ஆன்மிகத் தலைவா்கள், மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி சுதந்திரப் போராட்டத்தைத் தொடக்கிவைத்தனா். ஹனுமன் கற்பித்த தன்னலமற்ற சேவைகளும் ஊக்கமும் நாட்டை வலிமையாக்கும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com