
லக்கீம்பூா் கெரி குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா (கோப்புப்படம்)
லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில், மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் பேரணியின்போது, அங்கு வந்த பாஜகவினரின் காா்களில் ஒன்று, விவசாயிகள் மீது மோதி ஏற்பட்ட வன்முறையில், விவசாயிகள் நால்வா் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.
பாஜகவினா் வந்த காா்களில் ஒன்றில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவா் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.
அதைத் தொடா்ந்து, ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10ல் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள், வழக்கறிஞர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு விசாரித்து வந்தது.
கடந்த 4 ஆம் தேதியுடன் விசாரணை முடிவடைந்த நிலையில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் ஒரு வாரத்தில் ஆசிஷ் மிஸ்ரா சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.