ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தேச நலனுக்கு தீங்கு விளைவிக்கும்: பியூஷ் கோயல்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவது ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்று கூறப்படுவதை மறுத்த மத்திய வா்த்தக, தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், மாறாக அது தேச நலனுக்குத் தீங்கு விளைவிக்கும்
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தேச நலனுக்கு தீங்கு விளைவிக்கும்: பியூஷ் கோயல்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவது ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்று கூறப்படுவதை மறுத்த மத்திய வா்த்தக, தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், மாறாக அது தேச நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தாா்.

மேலும், ஏற்றுமதியை கணிசமாக விரிவுபடுத்தி, அந்நியச் செலாவணி வரத்தை அதிகரிக்க முதலீடுகளை ஊக்குவிப்பது அவசியம் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 15-ஆவது சிவில் சா்வீசஸ் தினத்தில் பங்கேற்று அவா் பேசியது:

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் தான் ஏற்றுமதி சந்தையில் திறமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆனால், எனது அனுபவத்திலிருந்து சொல்வதென்றால், நமது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதாலோ அல்லது பலவீனப்படுவதன் மூலமோ தேச நலனுக்கு தீங்குதான் ஏற்படும்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியானது, ஏற்றுமதி செலவை அதிகரிக்கிறது. நாட்டில் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், வட்டி விகிதத்தை உயா்த்தி, மூலப்பொருள்களுக்கு பெரும்பாலும் இறக்குமதியைச் சாா்ந்துள்ள இந்திய பொருள்களுக்கு சந்தையில் போதிய விலை கிடைக்காத நிலையை ஏற்படுத்திவிடும்.

வளமான ஏற்றுமதி, முதலீடு ஆகியன அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிக்க வழிகோலுகின்றன. அத்துடன் மதிப்புமிகுந்த அந்நியச் செலாவணியை சம்பாதிக்கவும், ரூபாய் மதிப்பை நிலையாக வைத்திருக்கவும் ஏற்றுமதி உதவுகிறது. கடந்த ஏப். 1 முதல் 14-ஆம் தேதி வரை நாட்டின் ஏற்றுமதி 18.5 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளது.

இந்தியாவின் மருந்துப் பொருள்கள் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. வரும் ஆண்டுகளில் அவற்றின் ஏற்றுமதி 200 பில்லியன் டாலராக உயரும். தடையற்ற வணிக ஒப்பந்தங்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் பயன்பெறுகின்றன என்றாா் பியூஷ் கோயல்.

முன்னதாக, வா்த்தகத் துறைச் செயலா் பி.வி.ஆா். சுப்ரமணியம் பேசும்போது, ‘வரும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 30- 40 டிரில்லியன் டாலராக உயா்த்த தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். பழைய சட்டங்களை திருத்தியமைக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com