பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ராணுவம் தயார்நிலை: ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எப்போதும் ராணுவத்தை தயார்நிலையில் வைத்திருக்குமாறு ராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். 
பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ராணுவம் தயார்நிலை: ராஜ்நாத் சிங்

புது தில்லி: பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எப்போதும் ராணுவத்தை தயார்நிலையில் வைத்திருக்குமாறு ராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டார். 
தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய  ராணுவத் தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த 5 நாள்கள் மாநாடு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 
சீனா, பாகிஸ்தானுடனான எல்லைகளில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு சவால்கள் குறித்தும், ரஷியா- உக்ரைன் போரின் எதிரொலியாக  பிராந்தியத்திற்கான போர் சாத்தியக்கூறுகள், புவிசார் அரசியல் தாக்கங்கள் குறித்தும் விரிவான ஆய்வுகளும், மதிப்பீடும் செய்யப்பட்டது. 
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், எந்தவொரு சாத்தியமான நிகழ்வுகளையும் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதற்காக பாராட்டுத் தெரிவித்தார். 
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: 
இன்று ராணுவத் தளபதிகளின் மாநாட்டில் உரையாற்றியபோது, இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளைத் தயார்நிலை வைத்திருப்பதற்காகவும், அவர்களின் திறமைக்காகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எதிர்காலத்தில், வழக்கத்திற்கு மாறான மற்றும் சமச்சீரற்ற போருக்கான ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்குமாறு ராணுவத் தளபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று பதிவிட்டுள்ளார். 
தேசத்திற்காக  தன்னலமற்ற, தளராத சேவையை ஆற்றி வரும் ராணுவப் படையையும், உள்நாட்டுமயமாக்கல் மூலம் நவீனமயமாக்கலுக்காக தொடர்ந்து இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்காகவும் பாதுகாப்பு துறை அமைச்சர் பாராட்டியதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
ராணுவத் தளபதிகள் மாநாடு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் ஒரு உயர் மட்ட நிகழ்வாகும். இந்த மாநாடு கருத்தியல் அளவிலான விவாதங்களுக்கான தளமாக அமைந்துள்ளதுடன், இந்திய ராணுவத்திற்கான முக்கியமான கொள்கை முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 
இந்த மாநாட்டில் பிராந்திய பகுதிகளின் பாதுகாப்புகள் குறித்தும், ராணுவ மோதலின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், ரஷியா-உக்ரைன் போரின் தாக்கங்கள் குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநாட்டில், கிழக்கு லடாக்கில், சீனாவின் 3,400 கி.மீ. நீளமுள்ள எல்லைப் பகுதிகளில்  நிலவி வரும் ராணுவ மோதல்கள் குறித்தும், அங்கு இந்திய ராணுவத்தின் தயார் நிலை குறித்தும் இந்திய ராணுவத் தளபதிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். 
மேலும், ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை குறித்தும், அங்கு நிலவி வரும் ஒட்டுமொத்த நிலைமை குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com