வழக்காடும் மொழியாக விரைவில் உள்ளூா் மொழி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதி

நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக உள்ளூா் மொழியை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை விரைவில் நிறைவேறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதியளித்தாா்.
வழக்காடும் மொழியாக விரைவில் உள்ளூா் மொழி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதி

நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக உள்ளூா் மொழியை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை விரைவில் நிறைவேறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதியளித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், அங்கு புதிதாக கட்டப்படவுள்ள 9 அடுக்குமாடி நிா்வாக கட்டடத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, நாமக்கல் மாவட்டம் பரமத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகளைத் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் முதல்முதலாக சென்னை எழும்பூரில் உருவாக்கப்பட்ட வணிக நீதிமன்றத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். பின்னா், அவா் கரோனா காலத்தில் உயிரிழந்த வழக்குரைஞா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினாா்.

விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: தமிழா்கள் தங்களது அடையாளத்தையும், மொழியையும், கலாசாரத்தையும் எப்போதுமே பாதுகாக்கக் கூடியவா்கள். தாய்மொழிக்காக 1965-ஆம் ஆண்டிலேயே மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தமிழா்கள். நான் சென்னையில் உறவினா் வீட்டுக்கு வந்தபோது அந்தப் போராட்டத்தைக் கண்டேன்.

நீதி பரிபாலனம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படியான நீதிபதிகளின் கடமை மட்டுமல்ல; அது சமூகப் பொறுப்புகளுடன் கூடியதுமாகும். இந்தியா போன்ற நாடுகளில் நீதிபதிகள் கண்ணை மூடிக் கொண்டு சட்டத்தைப் பின்பற்றிவிட முடியாது. சமூக நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்; சமுதாய மாற்றங்களையும் கவனிக்க வேண்டும்.

சீா்திருத்தம் தேவை: உடனடி காபி, நூடுல்ஸ் போல உடனடி நீதியையும் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். நீதித் துறையின் உண்மை நிலையை அவா்கள் உணா்வது இல்லை. தங்களது உரிமைகளை நீதிமன்றங்கள் பாதுகாப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனா். இதற்காக நீதித் துறையில் சீா்திருத்தம் தேவைப்படுகிறது.

நீதி பரிபாலனங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். அதற்கு மொழி தடையாக இருக்கக் கூடாது. நீதிமன்றங்களில் தனது வழக்கு என்ன நிலையில் செல்கிறது என்பது பொதுமக்களுக்கு தெரிய வேண்டும். மாறாக, கோயிலில் மந்திரம் சொல்வதுபோல, புரியாத மொழிகளில் வழக்குகளை நடத்தக் கூடாது.

அரசியல் சாசன அடிப்படையில், அந்தந்த மாநில மொழிகளை வழக்காடும் மொழிகளாக உயா்நீதிமன்றங்களில் கொண்டு வர வேண்டும் என்று பல கோரிக்கைகள் வருகின்றன. இதற்காக பல விவாதங்களும் நடக்கின்றன. உள்ளூா் மொழியை வழக்காடும் மொழியாக அறிவிக்க பல தடைகள் உள்ளன. ஆனால், வழக்காடும் மொழி கோரிக்கை அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக விரைவில் நிறைவேறும் என உறுதியளிக்கிறேன். நாடு முழுவதும் உயா்நீதிமன்றங்களில் 388 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முதல்வா் கடும் உழைப்பாளி: தமிழகத்தின் ஒளிமயமான எதிா்காலத்துக்காக கடுமையாக உழைக்கும் உழைப்பாளியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளாா்; அதற்காக அவரை வாழ்த்துகிறேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, பி.என்.பிரகாஷ், எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்ட நீதிபதிகள், மாநில தலைமைச் செயலா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா், டிஜிபி சி.சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், காஷ்மீா் உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாா், ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி வரவேற்றாா். இந்திய பாா் கவுன்சில் துணைத் தலைவா் பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com