ஜம்மு-காஷ்மீருக்கு மூன்றாண்டுகளில் முதல் பயணம்; மோடி தொடங்கி வைத்த திட்டங்களின் முக்கிய அம்சங்கள்

கடந்த 2019ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் பனிஹல் - காசிகுண்ட் சுரங்கப் பாதை, இரண்டு நீர் மின்சார திட்டங்கள் என மொத்தமாக 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.

ஜம்முவில் உள்ள பள்ளி கிராமத்தில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளுக்கு உரையாற்றிய அவர், "இந்த பகுதி ஒன்றும் எனக்கு புதிதல்ல. நானும் உங்களுக்கு புதிதல்ல. கடந்த இரண்டு மூன்றாண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் பல மைல்கற்களை எட்டியுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை முந்தைய அரசு நிறைவேற்றவில்லை. நாங்கள் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறோம்" என்றார்.

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியை விமரிசித்து பேசிய அவர், "கடந்த 60 ஆண்டுகளில், இந்த பகுதிக்கு என 17,000 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், நாங்கள் 38,000 கோடி ரூபாயை செலவழித்திருக்கிறோம்" என்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அரசியலமைப்பின் கீழ் வழங்குப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

5,300 கோடி ரூபாய் மதிப்பில் கிஷ்த்வாரில் உள்ள செனாப் ஆற்றில் 850 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்சார திட்டத்திற்கும் அதே ஆற்றில் குவார் பகுதியில் 540 மெகா வாட் திறன் கொண்ட மின்சார திட்டத்திற்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.

ரூ. 3,100 கோடி மதிப்பில் ஜம்மு - காஷ்மீா் பிராந்தியங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 16 கி.மீ. தொலைவு பனிஹல் - காசிகுண்ட் சுரங்கப் பாதையையும் மோடி திறந்து வைத்தார். 

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக, தொகுதி மறுசீரமைப்பு பணிகள் அங்கு நடைபெற்றுவருகிறது. 

கடந்த 2018ஆம் ஆண்டு முதல், ஜம்மு-காஷ்மிர் குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் இருந்துவருகிறது. முன்னதாக, மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com