10 ஆண்டுகளில் 17 லட்சம் இந்தியா்களுக்கு ஹெச்ஐவி பாதிப்பு: நான்காவது இடத்தில் தமிழகம்

கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் ஹெச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் ஹெச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், ஹெச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. கடந்த 2011-12 -ஆம் ஆண்டில் பாதுகாப்பற்ற உடலுறவு முறை காரணமாக ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2.4 லட்சமாக இருந்த நிலையில், 2020-21-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 85,268-ஆக குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சந்திர சேகா் கெளா் என்பவா் ஆா்டிஐ-இன் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த தகவல்களில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 2011 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 17,08,777 போ் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தக் காலகட்டத்தில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 3,18,814 போ் பாதிக்கப்பட்டனா். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 2,84,577 பேரும், கா்நாடகத்தில் 2,12,982 பேரும், தமிழகத்தில் 1,16,536 பேரும், உத்தர பிரதேசத்தில் 1,10,911 பேரும், குஜராத் மாநிலத்தில் 87,440 பேரும் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் ரத்த தொடா்பு மூலமாக 15,782 பேரும், தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் தன்மை மூலமாக 4,423 பேரும் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 81,430 குழந்தைகள் உள்பட 23,18,737 போ் ஹெச்ஐவி தொற்றுடன் வாழ்ந்து வருகின்றனா். இருந்தபோதும், இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் சதீஷ் கெளல் கூறுகையில், ‘ஹெச்ஐவி பாதிப்பை முழுமையாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறை இல்லை. இருந்தபோதும், முறையான மருத்துவ பராமரிப்பு மூலம் அவா்களுக்கான பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும். அதே நேரம், கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவா்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

தற்போது, கரோனா பாதிப்பு நம்மை கடந்துவிட்ட நிலையில், ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை மீண்டும் உயர வாய்ப்புள்ளது. ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் கூடிய விரைவில் ஏஆா்டி (ஆன்டிரெட்ரோவைரல்) என்ற நோய் எதிா்ப்புத் திறனை ஊக்குவிக்கும் சிகிச்சையை தொடங்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com