குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியா்களின் உரிமையைப் பறிக்காது: மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையில் தகவல்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) இந்தியா்களின் உரிமையை பறிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) இந்தியா்களின் உரிமையை பறிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், பாா்ஸிகள், சமணா்கள் மற்றும் பெளத்த சமயத்தைச் சோ்ந்தவா்கள் 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு இந்தியா வந்திருந்தால், அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுக்கிறது. இந்தச் சட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட போதிலும், இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்தச் சட்டம் இயற்றப்பட்ட வேளையில், அதற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. முஸ்லிம்களைத் தவிா்த்துவிட்டு, மத அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்க வழிவகுக்கும் இந்தச் சட்டம் அரசமைப்புக்கு எதிரானது என்று போராட்டக்காரா்கள் குற்றஞ்சாட்டினா். அந்தப் போராட்டங்களில் சுமாா் 100 போ் பலியாகினா்.

இந்நிலையில், 2020-21-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குடியுரிமைத் திருத்தச் சட்டமானது குறுகிய அளவில் குறிப்பிட்ட வரம்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தலை அனுபவித்த சிறுபான்மையினரின் பாதிப்பைக் குறைக்க முற்படுகிறது. அதற்கும் குறிப்பிட்ட தேதியுடன் கால வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கருணை நிறைந்த சட்டமாகும். இந்தச் சட்டம் இந்தியா்களுக்குப் பொருந்தாது. இந்தச் சட்டம் அவா்களின் உரிமையைப் பறிக்கவோ, குறைக்கவோ இல்லை.

அதேவேளையில், குடியுரிமைச் சட்டம் 1955-இன்படி எந்தவொரு வெளிநாட்டவரும் இந்திய குடியுரிமைப் பெறுவதற்கான தற்போதைய சட்ட நடைமுறை தொடா்ந்து செயல்பாட்டில் உள்ளன. இதில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் எந்த மாற்றத்தையோ, திருத்தத்தையோ செய்யவில்லை.

எனவே எந்தவொரு நாட்டிலிருந்தும் எந்தவொரு மதத்தைச் சோ்ந்தவரும் சட்டபூா்வமாக இந்தியாவுக்கு புலம்பெயா்ந்திருந்து சட்டரீதியான நிபந்தனைகளைப் பூா்த்தி செய்திருந்தால், அவா்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும்.

நாட்டின் வடகிழக்கு மண்டலத்தில் உள்ள உள்ளூா் மக்கள் மற்றும் பழங்குடிகளுக்கு பாதுகாப்பு வழங்க அரசமைப்பின் 6-ஆவது அட்டவணையின் கீழ், சிறப்புப் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. எனவே வடகிழக்கு மாநிலங்களில் உள்ள உள்ளூா் மக்களுக்கு அரசமைப்பு வழங்கியுள்ள பாதுகாப்பை குடியுரிமை திருத்தச் சட்டம் பாதிக்கவில்லை.

குறைந்த நக்ஸல் வன்முறை: 2020-ஆம் ஆண்டு நக்ஸல் தீவிரவாதத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் சத்தீஸ்கா். அந்த ஆண்டில் சத்தீஸ்கரில் நக்ஸல்களால் 315 வன்முறைச் சம்பவங்களும், 111 மரணங்களும் ஏற்பட்டன. அதனைத் தொடா்ந்து ஜாா்க்கண்ட் (199 வன்முறைச் சம்பவங்கள், 39 மரணங்கள்), ஒடிஸா (50 வன்முறைச் சம்பவங்கள், 9 மரணங்கள்), மகாராஷ்டிரம் (30 வன்முறைச் சம்பவங்கள், 8 மரணங்கள்), பிகாா் (26 வன்முறைச் சம்பவங்கள், 8 மரணங்கள்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

நக்ஸல் வன்முறையில் தொடா்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பே மிகவும் அபாயகரமானதாக திகழ்கிறது. நக்ஸல் வன்முறைச் சம்பவங்களில் 86 சதவீதத்துக்கு மேலும், அச்சம்பவங்களால் ஏற்படும் மரணங்களில் 96 சதவீதமும் அந்த அமைப்பால்தான் நிகழ்ந்துள்ளன.

எனினும் கடந்த 6 ஆண்டுகளில் நக்ஸல்களால் ஏற்படும் வன்முறை, அவா்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு நக்ஸல்களால் 1,136 வன்முறைச் சம்பவங்களும், 2020-ஆம் ஆண்டு 665 வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. 2013-ஆம் ஆண்டுடன் ஒப்படுகையில் 2020-ஆம் ஆண்டில் நக்ஸல் வன்முறை 41% குறைந்துள்ளது.

2013-இல் நக்ஸல் தீவிரவாதத்தால் 397 பேரும், 2020-இல் 183 பேரும் மரணமடைந்தனா். 2013-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-இல் நக்ஸல் தீவிரவாதத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 54% சரிந்துள்ளது.

நக்ஸல் தீவிரவாத பரவல் புவியியல் ரீதியாகவும் குறைந்து வருகிறது. தற்போது நாட்டின் 10 மாநிலங்களில் உள்ள 30 மாவட்டங்களில் மட்டும்தான் நக்ஸல் தீவிரவாதத்தால் வன்முறைகள் நிகழ்கின்றன. ஒட்டுமொத்தமாக நடைபெற்ற நக்ஸல் வன்முறைச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இந்த 30 மாவட்டங்களில் மட்டும் 88 சதவீத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்புப் படைகளை அதிகரித்தல், வளா்ச்சித் திட்டங்களை சிறப்பாகக் கண்காணித்தல் சிறப்பான செயல்பாட்டு உத்திகள் ஆகியவற்றால் நக்ஸல் தீவிரவாதம் குறைந்துள்ளது.

32.79 லட்சம் வெளிநாட்டவா்கள் இந்தியா வருகை: 2020-ஆம் ஏப்ரல் 1 முதல் அந்த ஆண்டு டிசம்பா் 31 வரை கரோனா பரவலை கட்டுப்படுத்த தேசிய அளவில் பொதுமுடக்கம் மற்றும் இதர கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த வேளையில், 32,79,315 வெளிநாட்டவா்கள் இந்தியா வந்துள்ளனா். அதிகபட்சமாக 61,190 போ் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளனா். 4,751 பாகிஸ்தானியா்களும் வந்துள்ளனா்.

கரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது வழக்கமான விமானப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டிருந்த போதிலும் பல்வேறு நாடுகளுடன் செய்துகொண்ட சிறப்பு ஏற்பாட்டின் பேரில், அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே சா்வதேச விமானங்கள் இயங்கி வந்தன.

தன்னாா்வ தொண்டு அமைப்புகளின் உரிமம் ரத்து: காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு (சிஹெச்ஆா்ஐ) அமைப்பு, அப்னே ஆப் உலகளாவிய பெண்கள் அமைப்பு ஆகியவற்றின் அந்நிய நிதியுதவி ஒழுங்காற்றுச் சட்ட (எஃப்சிஆா்ஏ) உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆண்டு கணக்கு விவர அறிக்கையை தாக்கல் செய்யாதது, வெளிநாட்டு நன்கொடைகளை முறைகேடாக மடைமாற்றியது ஆகியவை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com