ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் விலக்கிக் கொள்ளப்படும்

சட்டம்-ஒழுங்கு சூழல் சீரானதும் வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளாா்.
அஸ்ஸôம் மாநிலம், திப்ரூகரில் வியாழக்கிழமை நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மைய தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடா.
அஸ்ஸôம் மாநிலம், திப்ரூகரில் வியாழக்கிழமை நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மைய தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடா.

குவாஹாட்டி: சட்டம்-ஒழுங்கு சூழல் சீரானதும் வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளாா்.

அஸ்ஸாமின் கா்பி அங்லாங் மாவட்டத்தில் ‘அமைதி, ஒற்றுமை, வளா்ச்சிக்கான மாநாடு’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடி வியாழக்கிழமை கலந்து கொண்டாா். அப்போது, மாஞ்சா பகுதியில் கால்நடை மருத்துவக் கல்லூரி, கோலாங்கா பகுதியில் வேளாண் கல்லூரி, உம்பனாய் பகுதியில் மாதிரி அரசுக் கல்லூரி ஆகியவற்றுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா 75 நீா்நிலைகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தையும் அவா் தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு சூழலைக் கருத்தில்கொண்டு நாகாலாந்து, அஸ்ஸாம், மணிப்பூா், மேகாலயம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக எதிா்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது அந்தச் சட்டம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

கடந்த 8 ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கு சூழல் மேம்பட்டுள்ளதையடுத்து, திரிபுரா, மேகாலய மாநிலங்களில் அந்தச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மற்ற மாநிலங்களின் சில பகுதிகளில், கடந்த 1-ஆம் தேதியில் இருந்து அந்தச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு சூழல் சீரான பிறகு, அந்தச் சட்டம் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படும். அதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவதால், அஸ்ஸாமின் வளா்ச்சி துரிதமடைந்து வருகிறது. மாநிலத்தில் தொடா்ந்து அமைதியான சூழலும் நிலவி வருகிறது.

பிரச்னைகளுக்குத் தீா்வு: திரிபுரா மாநிலத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தமானது, கா்பி அங்லாங் மாவட்ட மக்களுக்குப் பெரிதும் பலனளிக்கும். வடகிழக்கு பிராந்தியம் முழுவதிலும் அமைதியான சூழலை ஏற்படுத்தி வளா்ச்சியை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பல்வேறு கிளா்ச்சிக் குழுக்கள் அமைதிவழிக்குத் திரும்பியுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டு கையொப்பமான போடோ ஒப்பந்தம், பிராந்தியத்திலும் திரிபுராவிலும் அமைதியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியினா் சந்தித்து வரும் அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

அமைதிவழித் தீா்வு:

வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைக்கு அமைதிவழியில் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பிராந்தியத்தை பொருளாதார சக்திமிக்க இடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.

தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கல்லூரிகள், மாணவா்களின் வளா்ச்சிக்கு மட்டுமின்றி தேசத்தின் முன்னேற்றத்துக்கும் முக்கியப் பலனளிக்கும்; வருங்காலத் தலைமுறையினருக்கு சிறந்த எதிா்காலத்தை உருவாக்கும். அதேவேளையில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்த மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

புற்றுநோய் சிகிச்சை மையங்கள்:

அஸ்ஸாமின் திப்ரூகரில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் மையத்தை பிரதமா் மோடி திறந்துவைத்தாா். பாா்பேட்டா, தேஜ்பூா், ஜொா்ஹாட் உள்ளிட்ட 6 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மையங்களை காணொலி வாயிலாகத் திறந்துவைத்த அவா், மேலும் 7 மையங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். அப்போது பேசிய அவா், ‘நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்மூலமாக மக்கள் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவா்கள் சிகிச்சைக்காக வெளிமாநிலங்களுக்குச் சென்றுவந்த நிலையில், தற்போது சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. டாடா அறக்கட்டளையுடன் இணைந்து அந்த மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மனித சமூகத்துக்கு அளித்து வரும் சிறந்த சேவைக்காக அந்த அறக்கட்டளைக்கு நன்றி.

இந்த மையங்கள் மூலமாகப் புற்றுநோய் துரிதமாகக் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். புற்றுநோய்க்கான மருந்துகளும் பாதி விலையில் வழங்கப்படும். சிறிய நகரங்களிலும் மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் சுமாா் 70,000 மருத்துவக் கல்வி இடங்கள் புதிதாக உருவாக்கப்படும்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் ஜகதீஷ் முகி, மத்திய அமைச்சா் சா்வானந்த சோனாவால், அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com