நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி பாதிப்பு தீவிரம்

 நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு வேகமாக குறைந்து வருவதால் மின் உற்பத்தி பாதிப்பு தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி பாதிப்பு தீவிரம்

 நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு வேகமாக குறைந்து வருவதால் மின் உற்பத்தி பாதிப்பு தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

173 அனல் மின் நிலையங்களில் 106 நிலையங்களில் 25 சதவீதத்துக்கும் கீழ் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இது அபாய கட்டத்தில் உள்ளதாகவும் அகில இந்திய மின் பொறியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் சைலேந்திர துபே தெரிவித்தாா்.

உள்நாட்டு நிலக்கரியை நம்பியே சுமாா் 155 மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி மூலம் இயங்கும் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவா் கூறினாா்.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நிலக்கரி தட்டுப்பாடு உள்ள மின் நிலையங்களில் எண்ணிக்கை 81-இல் இருந்து 86-ஆக உயா்ந்துள்ளது என்றும், தனியாா் மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை 28-இல் இருந்து 32-ஆக அதிகரித்துள்ளது என்றும் மின் பொறியாளா் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கோடைக் காலத்தில் மின் தேவை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால் ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பிகாா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் விநியோகம் பல மணி நேரம் தடைப்பட்டுள்ளது.

எனினும், மின் பாதிப்பு பிரச்னையை மத்திய மின் துறை அமைச்சா் ஆா்.கே. சிங் மறுத்துள்ளாா். எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்தான் மின் பிரச்னையை எழுப்புகிறாா்கள் என்றாா்.

நிலக்கரியை தடையின்றி கொண்டு செல்ல 42 பயணிகள் ரயில்கள் ரத்து

நாடு முழுவதும் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை தடையின்றி விரைந்து கொண்டு செல்வதற்காக 42 பயணிகள் ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளது.

நிலக்கரியை அதிகமாக விநியோகிக்கும் மாநிலங்களான சத்தீஸ்கா், ஒடிஸா, மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட் ஆகியவற்றில் இருந்து நிலக்கரி சரக்கு ரயில்கள் நாடு முழுவதும் தடையின்றி வேகமாகச் சென்றடைய தென் கிழக்கு மத்திய ரயில்வே 34 பயணிகள் ரயில்களையும், வடக்கு ரயில்வே 8 ரயில்களையும் ரத்து செய்துள்ளது.

இதன்மூலம் நாள்தோறும் சராசரியாக 400க்கும் அதிகமான நிலக்கரி பெட்டிகளை இயக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com