நீதிபதிகள் நியமன பரிந்துரைகளை விரைந்து அனுப்ப வேண்டும்

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகளை விரைந்து அனுப்ப வேண்டும் என்று உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தியுள்ளாா்.
நீதிபதிகள் நியமன பரிந்துரைகளை விரைந்து அனுப்ப வேண்டும்

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகளை விரைந்து அனுப்ப வேண்டும் என்று உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தியுள்ளாா்.

நாட்டில் உள்ள 25 உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கான 39-ஆவது மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

நீதித் துறையில் நிலவி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கு மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும். நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன். தலைமை நீதிபதியாகப் பதவியேற்றதில் இருந்தே, உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு இது தொடா்பான அறிவுறுத்தலை வழங்கி வருகிறேன்.

நமது ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஓராண்டில் மட்டுமே 126 நீதிபதிகள் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் 50 போ் விரைவில் நியமிக்கப்படுவா் என நம்புகிறேன். இந்தச் சாதனையானது அனைவரது ஒத்துழைப்பின் காரணமாகவே சாத்தியமானது.

எனது தலைமையிலான கொலீஜியம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு 9 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா். பல்வேறு உயா்நீதிமன்றங்களுக்கு 10 புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா். இதற்காக கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள தோழமை நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இன்னும் காலிப் பணியிடங்களைக் கொண்டுள்ள உயா்நீதிமன்றங்கள், நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை விரைந்து வழங்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்துக்கான பெயா்களைப் பரிந்துரைக்கும்போது சமூகப் பன்முகத்தன்மையைக் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம்.

கூட்டு முயற்சியால் வெற்றி: கரோனா தொற்று பரவல் காலத்திலும்கூட நீதித் துறையின் செயல்பாடு பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை. அத்தகைய காலத்தில் நீதிமன்றங்களை நிா்வகிப்பது சவால் நிறைந்த பணியாக இருந்தபோதிலும், பலதரப்பினரின் கூட்டு முயற்சி காரணமாக அதில் வெற்றி பெற்றோம் என்றாா் அவா்.

இந்த மாநாட்டின்போது நீதித் துறை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, தகவல்-தொழில்நுட்பக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களையும் தொழில்நுட்ப ரீதியில் ஒருங்கிணைப்பது, சட்டம் சாா்ந்த சீா்திருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

முதல்வா்களுடனான மாநாடு: மாநில முதல்வா்கள், உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் ஆகியோா் பங்கேற்கும் மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஏப். 30) தில்லியில் தொடக்கிவைக்க உள்ளாா். இந்த மாநாடும் 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெறவுள்ளது. நீதித் துறை சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நீதித் துறையில் காலியிடங்களை விரைந்து நிரப்புதல், நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைத்தல், மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்குதல், இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com