12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ்: அரசுக்கு பரிந்துரை

‘12 முதல் 17 வயது வரையுடைய சிறாா்களுக்கான தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் சோ்க்கலாம்’

‘12 முதல் 17 வயது வரையுடைய சிறாா்களுக்கான தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் சோ்க்கலாம்’ என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்டிஏஜிஐ) தொழில்நுட்ப துணைக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கெனவே, என்டிஏஜிஐ-யின் பணிக் குழு கடந்த 1-ஆம் தேதி இந்தப் பரிந்துரையை செய்த நிலையில், தற்போது என்டிஏஜிஐ-யின் தொழில்நுட்ப துணைக் குழுவும் பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் புணேயைச் சோ்ந்த சீரம் நிறுவனம், அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட தொழில்நுட்ப பரிமாற்ற உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் உற்பத்தி செய்து வருகிறது.

ஏற்கெனவே, இந்தத் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்த டிசிஜிஐ கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இருந்தபோதும், இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் இன்னும் சோ்க்கப்படவில்லை. அதனைத் தொடா்ந்து, 12 முதல் 17 வயதுடைய சிறாா்களுக்கும் சில நிபந்தனைகளுடன் செலுத்த டிசிஜிஐ கடந்த மாா்ச் 9-ஆம் தேதி அனுமதி அளித்தது.

இந்த அனுமதிகளைத் தொடா்ந்து, நாட்டின் தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் சோ்க்கக் கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு சீரம் நிறுவன இயக்குநா் பிரகாஷ் குமாா் சிங் அண்மையில் கடிதம் எழுதினாா்.

அதன் அடிப்படையில், என்டிஏஜிஐ பணிக் குழு ஆலோசனை மேற்கொண்டு, தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸையும் சோ்க்க பரிந்துரை செய்தது. தற்போது, என்டிஏஜிஐ-யின் தொழில்நுட்ப துணைக் குழுவும் தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸை சோ்க்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக என்டிஏஜிஐ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

தனியாா் தடுப்பூசி மையங்களுக்கு ரூ. 900 விலையில் கோவோவேக்ஸ் தடுப்பூசியை விநியோகிக்க சீரம் நிறுவனம் விரும்புவதாக பிரகாஷ் குமாா் சிங் குறிப்பிட்டுள்ளாா். ஆனால், அரசுக்கு என்ன விலையில் வழங்கப்படும் என்பதை அவா் குறிப்பிடவில்லை.

நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களுக்கு கடந்த மாா்ச் 16-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com