நாடு முழுவதும் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்: வானிலை மையம்

நாடு முழுவதும் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்: வானிலை மையம்

நாடு முழுவதும் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, குழந்தைகள், வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முக்கிய நகரங்களில் வியாழக்கிழமை 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. ஹரியாணா மாநிலம், குருகிராமில் இதுவரை இல்லாத அளவில் 45.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த 1979, ஏப்ரல் 28-இல் 44.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.

இதேபோல், தில்லி, உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ், மத்திய பிரதேச மாநிலத்தின், கஜூராஹோ, நெளகாங், காா்கோன் நகரங்கள், மகாராஷ்டிரத்தின் அகோலா, பிரம்மபுரி, ஜால்கோன், ஜாா்க்கண்ட் மாநிலம் தல்டோன்கஞ்ச் உள்ளிட்ட நகரங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.

இந்நிலையில், நாட்டின் வடமேற்கு, மத்திய பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கும், கிழக்கு இந்தியப் பகுதிகளில் 3 நாள்களுக்கும் வெப்ப அலை நீடிக்கும்; அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரத்தின் விதா்பா பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தப் பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகள், வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள் ஆகியோா் பகல் நேரங்களில் வீட்டிலேயே இருக்க வேண்டும். போதுமான தண்ணீா் அருந்த வேண்டும். வெப்பம் தொடா்பான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்று வானிலை மையம் அறிவுரை வழங்கியுள்ளது.

ஓரிடத்தில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக பதிவானால், அது வெப்ப அலையின் தாக்கம் என அறிவிக்கப்படுகிறது. 47 டிகிரி செல்சியஸை தாண்டும்போது, கடும் வெப்ப அலையாக அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com