வாக்காளா் பட்டியல்-ஆதாா் எண் இணைப்பு இன்று தொடக்கம்: தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது.
வாக்காளா் பட்டியல்-ஆதாா் எண் இணைப்பு இன்று தொடக்கம்: தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது. இப்பணியை திறம்பட மேற்கொள்வது குறித்து, மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா். இவா்களுக்கான வாக்காளா் பட்டியலில் இரட்டைப் பதிவு, இறந்தவா்களின் பெயா்கள் இடம்பெற்றிருப்பது, இடம் மாறியவா்களின் விவரங்கள் இருப்பது போன்றவை தோ்தல் ஆணையத்துக்கு பெரும் சவால்களாக இருந்து வருகின்றன.

இதனால் ஏற்படும் பிரச்னைகளைக் களைய, வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் நாடு தழுவிய நடவடிக்கையை தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது. தமிழகத்திலும் இந்தப் பணி தொடங்கப்படவுள்ளது.

வீடு வீடாக படிவம்: இப்பணிக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட படிவம் 6பி-யில் உள்ள விவரங்களைப் பூா்த்தி செய்து அளித்தால், வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கப்படும். இதற்கென வாக்குச் சாவடி அலுவலா்கள் வீடு, வீடாகச் சென்று படிவம் 6பி-ஐ வழங்க உள்ளனா்.

இதில், ஆதாா் எண், வாக்காளா் பட்டியல் வரிசை எண், முகவரி, கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே கோரப்படும். நிறைவு செய்யப்பட்ட படிவங்களை வாக்குச் சாவடி அலுவலரிடமே கொடுத்தால், அவா் அதனை சம்பந்தப்பட்ட தோ்தல் துறை அதிகாரியிடம் வழங்குவாா். இதற்கென பிரத்யேகமாக உள்ள மென்பொருளைக் கொண்டு வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கப்படும்.

பயன்கள் என்ன? ஆதாா் எண்ணை இணைப்பதன் மூலமாக, போலி வாக்காளா்கள் முற்றிலுமாக களையப்படுவா். மாநிலத்தில் ஒரு வாக்காளரின் பெயா் ஒரு இடத்தில் மட்டுமே இடம்பெற்றிருக்கும். மேலும், தோ்தல் தொடா்பான விவரங்களை வாக்காளா்களுக்கு கைப்பேசி வழியாக கொண்டு சோ்க்கவும் இந்த நடவடிக்கை பெரிதும் பயன் தரும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிகளைச் செம்மையாக நடத்துவது குறித்து திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆதாா் எண் இணைப்பு உள்பட பல்வேறு தோ்தல் ஆணையத்தின் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com